உடுப்பி (கர்நாடகா): கார்கலா தாலுகாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த கர்நாடகா வருவாய் துறை அமைச்சர் அசோக், ஹிஜாப் பிரச்சனையில் மாணவர்களுக்கு பின்னால் பயங்கரவாத அமைப்புகள் இருப்பதாக சர்ச்சைக்குரிய விதத்தில் பேசியுள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது, "ஹிஜாப் விவகாரத்தில் இஸ்லாமிய பெண்களை நாம் குறைக்கூற முடியாது. இதன் பின்னணியில் இருந்து பலர் இயக்குகிறார்கள். ஹிஜாப் விவகாரத்தில் பன்னாட்டு பயங்கரவாத அமைப்புகள் உள்ளன.
உடுப்பியில் தொடங்கிய போராட்டம் எப்படி சர்வதேச அளவிற்கு செல்ல முடியும்?. இந்த அளவிற்கு இந்தப் பிரச்சனையை யார் இயக்குகிறார்கள்?. ஐஎஸ்ஐஎஸ் போன்ற அமைப்புகள்தான் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மாணவர்கள் பள்ளிக்கு படிப்பதற்காகத்தான் செல்கின்றனர். மதப்பரப்புரைக்காக அல்ல என்பதை அவர்கள் அறிந்துகொள்ள வேண்டும். தங்களது வீடுகளில் மாணவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளலாம். ஆனால், பள்ளி, கல்லூரிகளில் கல்வியில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும்.
ஐஸ்ஐஸ் அமைப்பின் தூண்டுதலால், இங்கே இருக்கும் பயங்கரவாத அமைப்புகள் ஹிஜாப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இந்த போராட்டத்தில் மாணவர்கள் பங்கேற்றிருப்பதால், நாங்கள் பெரிய அளவில் இதில் தீவிரம் காண்பிக்கவில்லை. தக்க சமயத்தில் சரியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இப்போராட்டம் தொடர்பான முழுமையான விசாரணை மேற்கொள்ளப்படும். முதலமைச்சரிடம் இந்த பிரச்சனை குறித்து நான் பேச உள்ளேன். இந்தக் கலவரத்திற்கு பின்னால் இருக்கும் பயங்கரவாத அமைப்புகளை வெகு விரைவில் வெளிச்சத்திற்குக் கொண்டு வருவோம்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஹிஜாப் அணிவது அடிப்படை உரிமை, கல்வி நிர்வாகம் அதில் தலையிட முடியாது: நீதிமன்றத்தில் வழக்கு