டெல்லி: 'மனதின் குரல் நிகழ்ச்சி' மூலம் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றும் நிகழ்ச்சி இன்று (நவ. 26) நடைபெற்றது. இதில், உரையாற்றி பிரதமர் மோடி கூறும் போது, "இந்தியாவில் திருமணங்கள் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. குறிப்பாகப் பெரிய குடும்பங்களின் திருமணங்களை வெளிநாட்டில் நடத்தும் போக்கு அதிகரித்து வருகிறது. இது மிகவும் கவலை அளிக்கிறது. இதனால், நாட்டின் நிதி வெளியேறுவது அதிகரிக்கிறது. எனவே, இந்தியாவிலேயே திருமணங்களை நடத்த வேண்டும் எனவும் அதன் அவசியத்தையும் வலியுறுத்தி நாட்டு மக்களிடம் உரையாற்றினார்.
மேலும், பிரதமர் நரேந்திர மோடி திருமண நிகழ்வுக்குத் தேவையான பொருட்கள் அனைத்தும் இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்களை வாங்க மக்கள் முன்னுரிமை அளிக்க வேண்டும். குறிப்பாக இந்தியாவில் பிரத்தியேகமாகத் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். இந்தியாவில் தற்போது நடைபெற உள்ள திருமண நிகழ்ச்சி மூலம் ரூ. 5 லட்சம் கோடி வர்த்தகம் நடைபெறும் என வல்லுநர்களால் கணிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்தியப் பொருட்களுக்கு முன்னுரிமையை மக்கள் அளிக்க வேண்டும்.
மேலும், திருமணம் என்ற தலைப்பு வரும் போது எனது இதயத்தின் வலியை என குடும்ப உறுப்பினர்களிடம் சொல்லாமல் யாருடன் சொல்ல முடியும். சில பெரிய குடும்பங்கள் வெளிநாடுகளில் திருமணம் நடத்துவது தேவையா? எனக் கேள்வி எழுப்பினார்.
இந்தியாவிலுள்ள பெரிய குடும்பங்கள் நம் நாட்டிலேயே திருமணம் நடத்தினால் நம் நாட்டின் பணம் நம் நாட்டிலேயே இருக்கும். இந்த பணம் நாட்டு மக்களுக்குச் சேவை செய்வதற்கு வாய்ப்பாக அமையும் எனச் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், உங்கள் திருமணத்தை நம் நாட்டில் நடத்துவதன் மூலம் (Vocal for Local) உள்ளூருக்குக் குரல் என்ற பணியை விரிவுபடுத்த முடியும்.
இந்தியாவிலுள்ள பெரிய குடும்பங்கள் விரும்பும் அமைப்பு இன்று இங்கு இல்லாமல் இருக்கலாம். ஆனால், இது போன்ற திருமண நிகழ்வுகள் நடைபெறும் போது அதற்கான அமைப்புகள் வளரும். இந்தியாவின் வளர்ச்சிக்கு நாட்டு மக்களும் ஒத்துழைப்பு வழங்கினால் நம் நாட்டின் முன்னேற்றத்தை எந்த சக்தியினால் தடுக்க முடியாது. மேலும், 140 கோடி மக்களிடமும் பல மாற்றங்கள் நடைபெறுவது தெளிவாகத் தெரிகிறது.
இறுதியாக நடைபெற்ற மனதின் குரல் நிகழ்ச்சியில் உள்ளூர் தயாரிப்புகளை வாங்குவது குறித்து உரையாற்றினேன். (Vocal for Local) 'உள்ளூருக்குக் குரல்' என்ற பணி குறித்துக் கூறியிருந்தேன். இதனால், தற்போது இந்தியாவில் நடைபெற்ற தீபாவளி, பாய்யா தூஜ் மற்றும் சாத் ஆகிய நாட்களில் ரூ.4 லட்சம் கோடிக்கு உள்ளூர் பொருட்களின் வர்த்தகம் நடைபெற்று உள்ளது" எனப் பிரதமர் மோடி தெரிவித்தார்.
இதையும் படிங்க: இந்திய அரசியலமைப்பு தினம்; உச்ச நீதிமன்ற வளாகத்தில் அம்பேத்கர் சிலையை திறந்து வைத்த குடியரசுத் தலைவர்!