சிலிகுரி: ஐஆர்சிடிசி (IRCTC), ஆண்டுதோறும் சுற்றுலாப்பயணிகளுக்காக பல்வேறு சிறப்பு சுற்றுலா பேக்கேஜ்களை ஏற்பாடு செய்து வருகிறது. இந்த நிலையில் தென் மாநிலங்களுக்கு 'ஸ்வதேஷ் தர்ஷன்' என்ற சிறப்பு சுற்றுலா ரயிலை இயக்க ஐஆர்சிடிசி முடிவு செய்துள்ளது. இந்த ரயில் மூலம் சுற்றுலாப்பயணிகள் குறைந்த கட்டணத்தில் தென் மாநிலங்களுக்கு சுற்றுலா செல்லலாம். இந்தப் பயணத்தில் தங்குமிடம், உணவு என முழு ஏற்பாடுகளையும் ஐஆர்சிடிசி செய்கிறது.
இந்த ரயில் மார்ச் 15ஆம் தேதி, பீகாரின் கதிஹார் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு, திருப்பதி, ராமேஸ்வரம், கன்னியாகுமரி, மதுரை உள்ளிட்ட இடங்களுக்குப் பயணிக்கும். இந்த சுற்றுலாவுக்கு மூன்று பேக்கேஜ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அதன்படி, ஸ்லீப்பரில் ஒருவருக்கு 20,900 ரூபாயும், ஏசி மூன்றடுக்கு படுக்கைக்கு 34,500 ரூபாயும், ஏசி இரண்டடுக்கு படுக்கைக்கு 43,000 ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஐஆர்சிடிசியின் தலைமைக் கண்காணிப்பாளர் தீபாங்கர் மன்னா கூறுகையில், "இந்த பேக்கேஜில் உணவு, தங்குமிடம் அனைத்தும் சேர்க்கப்படும். அதனால் கூடுதல் செலவு எதுவும் இருக்காது. முதலுதவி உள்ளிட்ட பயணிகளின் பாதுகாப்பு மற்றும் வசதிக்காக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும். இதுகுறித்து கூடுதல் தகவல்களை ஐஆர்சிடிசியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் காணலாம்" என்று கூறினார்.