பெங்களூரு: 2009ஆம் ஆண்டு ஐபிஎஸ் அலுவலராக பொறுப்பேற்ற வெர்டிகா கட்டியார், இந்திய வெளியுறவுத் துறையில் பணிபுரிந்துவரும் நிதின் என்பவரை திருமணம் முடித்துள்ளார். நிதினுக்கு மதுப்பழக்கம், புகைக்கும் பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக இருவருக்கும் பல முறை வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்தச்சூழ்நிலையில், தனது கணவர் வரதட்சணை கேட்டு மிரட்டுவதாக வெர்டிகா கட்டியார், பெங்களூரு காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்தப் புகாரில், தனது பாட்டியிடம் ஏற்கனவே ரூ.5 லட்சத்தை வரதட்சணையாக கணவர் நிதின் பெற்றதாகவும், தற்போது 35 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டுவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், 35 லட்சம் ரூபாயை தீபாவளிக்குள் கொடுக்கவிட்டால் விவாகரத்து செய்துவிடுவதாக மிரட்டுவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இந்தப்புகாரின் அடிப்படையில் வெர்டிகா கட்டியாரின் கணவர் உள்பட ஏழு பேர் மீது வரதட்சணைக்கொடுமை, கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதையும் படிங்க: தேனி அருகே வரதட்சணைக் கொடுமையால் பெண் தற்கொலை: கணவர் கைது