டெல்லி: "இன்வெஸ்ட் இந்தியா", இந்தியாவின் தேசிய முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வசதி நிறுவனம், இந்தியாவில் முதலீட்டாளர்களுக்கான செயல்படும் அமைப்பாக விளங்குகிறது. இது 2009ஆம் ஆண்டில் இந்திய அரசின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறையின்கீழ் அமைக்கப்பட்ட ஒரு லாப நோக்கமற்ற முயற்சியாகும்.
இந்த அமைப்பு கரோனா பேரிடர் காலத்திலும் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் நெருக்கடி காலத்தில் மேலாண்மை வசதி ஏற்படுத்திக் கொடுத்தல், அரசு அவசரநிலை மற்றும் பொருளாதார நிவாரண நடவடிக்கைகள் குறித்த அறிவிப்பு, நெருக்கடியை வழங்குதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தி அதில் வெற்றியும் பெற்றது. மேலும், கரோனா வைரஸ் தொற்றிலிருந்து இந்தியா மீள்வதற்கு பொருளாதார ரீதியிலும் உதவியது.
இந்நிலையில் இந்திய அரசு, வர்த்தகம் மற்றும் மேம்பாடு குறித்த ஐக்கிய நாடுகளின் ஒருங்கிணைப்பு 2020இன் விருதைப் பெற்றுள்ளது. உலகெங்கிலும் உள்ள 180 தேசிய முதலீட்டு ஊக்குவிப்பு முகவர் நிறுவனங்களால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளை மதிப்பீடு செய்து இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
ஜெனீவாவில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில், இந்த விருது உலகின் சிறந்த நடைமுறை முதலீட்டு ஊக்குவிப்புக்கான சாதனைகளை அங்கீகரிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விருது குறித்து, இன்வெஸ்ட் இந்தியாவின் மேலாண் இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அலுவலர் தீபக் பாக்லா கூறுகையில், "இந்தியாவை விருப்பமான முதலீட்டு இடமாக மாற்றுவதற்காக பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்ட தொலைநோக்குப் பார்வைக்குச் சான்றாக இந்த விருது கிடைத்துள்ளது.
இந்த அமைப்பு வணிகத்தை எளிதாக்குவதுடன் மக்களின் வாழ்க்கையை எளிமையாக மாற்றுகிறது. அதுமட்டுமின்றி, இந்த விருது இந்திய அரசு கரோனா வைரஸ் தொற்றை திறம்பட நிர்வகித்துள்ளது என்பதை அங்கீகரிக்கும் விதமாக அமைந்துள்ளது" என்றார்.
இதையும் படிங்க: காபி டே சிஇஓ பொறுப்புக்கு சித்தார்த் மனைவி மாளவிகா தேர்வு!