இந்நாட்டில் பெண்களுக்கென்று பலப்பல தினங்கள் இருக்கின்றன, மாதத்தில் ஒருநாளாவது பெண்களுக்கென்றே கொண்டாடப்படுகிறது என்கிற பொதுப்புத்தி ஆண்களிடத்தில் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் அவர்களின் மனங்கள் உணர மறுப்பது என்னவென்றால், அவைகளில் பெரும்பாலானவை கொண்டாட்டங்களுக்கானது மட்டுமல்ல; விழிப்புணர்வுக்காவும் என்பதைத்தான்! அப்படிப்பட்ட விழிப்புணர்வுக்காகத்தான், ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 25ஆம் தேதி -பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பிற்கான சர்வதேச தினமாக (International Day for the Elimination of Violence Against Women) கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
‘இப்படி ஒரு விழிப்புணர்வு தினம் அவசியமா?’ என்று கேட்டால், ஆம்! நூற்றுக்கு நூறு சதவீதம் அவசியம்தான். நம் நாட்டில் ஒடுக்கப்பட்ட மக்கள், சிறுபான்மையின மக்கள் ஒரு நாளில் எவ்வளவு வன்முறைகளுக்கு ஆளாகிறார்களோ அதைக் காட்டிலும் பெண்கள் அதிகமாகவே வன்முறைக்கு உள்ளாக்கப் படுகிறார்கள். சமூகத்தில் சாதி, சமய, வர்க்க பேதமின்றி பெண்களுக்கெதிரான வன்முறை நிகழ்ந்து கொண்டேதான் இருக்கின்றன. சராசரியாக மூன்றில் ஒரு பெண் என்கிற விகிதத்தில் - பெண்கள் மீது வன்முறை கட்டவிழ்க்கப்படுகிறது என யுனைட்டெட் நேஷன்ஸ் (United Nations) அமைப்பின் தரவுகள் சொல்கின்றன.
பெண்களின் பாதுகாப்பின்மை என்றவுடன், பொது இடங்களில், அலுவலகங்களில் மட்டுமே அவர்களுக்கு பாதுகாப்பு பற்றாக்குறை என்று நினைத்தோமென்றால் அது நம்முடைய அறியாமையைத்தான் காண்பிக்கும். பொது இடங்களுக்கு சற்றும் குறையாமல் சொந்த வீடுகளிலும் பெண்களுக்கு பாதுகாப்பின்மை தொடர்கிறது. ஆம்! அதற்கு பெரும் சான்று கரொனா கால ஊரடங்கு நேரத்தில் வீட்டில் பெண்கள் மீது அத்துமீறிய வன்முறை மிக அதிகமாக பதிவாகி இருந்தது. நோய்த்தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள வீட்டில் இருந்த நேரத்தில், வீட்டிலேயே பாதுகாப்பு இல்லாமல் இருந்த நிலை பெண்களுக்கு மட்டும்தான் தெரியும். குடும்ப வன்முறை (domestic violence), கொடும்சொற்கள் (verbal abuse), அனுமதியின்றி மனைவியை பலவந்தப்படுத்துதல் (Marital Rape) என எண்ணிலடங்கா வன்முறைகள் பெண்களுக்கு தங்கள் இல்லங்களிலிருந்தே தான் தொடங்குகின்றன.
ரத்தம் வரும் அளவிற்கு ஒருவரை மூர்க்கமாக தாக்குவது மட்டுமே வன்முறை அல்ல; மனதை காயப்படுத்தும் ஒரு வார்த்தை கூட வன்முறைதான். இவை அனைத்தையும் மிக இயல்பாக நம் வீட்டில் கண்டிருப்போம், “உனக்கெல்லாம் இதைப்பத்தி என்ன தெரியும்?”, “சமையலையே உனக்கு சரியா செய்யத் தெரியாது, இந்த லட்சணத்துல நீயெல்லாம் எதுக்கு பேசறே?”, “முதல்ல இந்த மாதிரி எனக்கு புத்திமதி சொல்றத நிறுத்து” போன்ற வசைகளை நம் வீட்டுப் பெண்களிடம் தந்தையோ, அண்ணனோ, உறவினரோ, ஏன் நாமே கூட சொல்லியிருப்போம். ஆனால் இவை அனைத்துமே ஒரு விதமான அடக்குமுறைதான் என்பதை நாம் புரிந்து கொள்ள நமக்கு இன்னும் எவ்வளவு காலம் தேவைப்படுமோ?
ஒரு கட்டத்தில் பெண்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறைகளுக்கு பெண்களும் காரணமாக இருக்கிறார்கள். சிறு வயதிலிருந்தே பெண் பிள்ளைகளிடம், “போற வீட்ல என்ன சொன்னாலும் பொறுமையா இரு”, “அவங்க கோவமா நடந்துக்கிட்டாலும் நீதான் பக்குவமா போகணும்”, “உன் கல்யாண வாழ்க்கையிலதான் நம்ம குடும்பத்தோட மரியாதையே இருக்கு, அதனால என்ன ஆனாலும் தாங்கிகிட்டு வாழற வழியப் பாரு” என்று ஒரு தாய் சொல்லிக்கொடுப்பதில் தொடங்குகிறது பெண்களின் மீதான வன்முறை. ஆனால் அவர்களுக்கும் அப்படியே பழக்கப்படுத்தப்பட்ட விஷயங்களை - அடக்குமுறை என்று உணராமலேயே அடுத்த தலைமுறைக்கும் கடத்தி விடுகிறார்கள்.
பெண்கள் கல்வி பயில்வது, பொருளாதார ரீதியாக தனித்து நிற்பது போன்றவை எல்லாம் - அவர்களை வன்முறையிலிருந்து தற்காத்துக் கொள்ள வேண்டுமானால் உதவலாம். ஆனால் அவர்களுக்கெதிரான வன்முறையை முற்றிலும் ஒழிக்க வேண்டுமானால் ஆண்கள்தான் அவர்களை சுக துக்கங்கள் நிறைந்த சக மனிதராக பார்க்க வேண்டும். ஆம்! நாம் பெண்களை ஆராதிக்கவும் வேண்டாம்; அத்துமீறவும் வேண்டாம். ஆக, ‘வன்முறை எந்த வடிவத்தில் வந்தாலும் அதற்கு எதிராக நிற்போம்‘ என்று ‘பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பிற்கான சர்வதேச தினமான‘ இன்றைய நாளில் உறுதி ஏற்போம்.
எட். விஸ்வநாத் பிரதாப் சிங்