1989 ஆம் ஆண்டு இதே நாளில் குழந்தை உரிமைகளான (18 வயது உட்பட்டவர்களின்) சுதந்திரம், பாதுகாப்பு, அடிப்படை வசதிகள் ஆகியவற்றை உறுதி செய்யும் வகையில் 37 விதிகளைக் கொண்ட அறிக்கையை ஐ.நா அவை வெளியிட்டது.
அந்த நாளையே உலக நாடுகள் பொதுவான வகையில் குழந்தைகள் உரிமைகள் நாள் (Children's rights day) என கொண்டாடி வருகின்றன.
குழந்தைகள் உரிமைகள் என்றால் என்ன?
பொதுவாக 18 வயதுக்கு குறைவானவர்கள் என வரையறுக்கப்படுகின்ற குழந்தைகளின் கல்வி, சுகாதாரம், கண்ணியம், சமத்துவம் உள்ளிட்ட அடிப்படை உரிமைகளையே குழந்தைகள் உரிமைகள் என்று மனித உரிமையார்வலர்கள் கூறுகின்றனர்.
சிறார்கள் மற்றும் குழந்தைகள் உரிமைகள் தொடர்பான சர்வதேச ஒப்பந்தங்களும் இவற்றை பாதுகாப்பதற்கான சிறப்புத் தேவைகளை அங்கீகரிக்கின்றன. ஆனால் நடைமுறையில் இவை பாதுகாக்கப்படுகிறதா என்றால் அதற்கான பதில் கேள்விக்குறியாகவே உள்ளது.
உண்மைகள் : குழந்தைகள் மீதான உரிமை மீறல்கள்
கடந்த 2015 ஆம் ஆண்டில் மட்டும் 2 வயது முதல் 17 வயது வரையிலான சுமார் 1 பில்லியன் குழந்தைகள் உடல், பாலியல் அல்லது உணர்ச்சி வன்முறைகளை அனுபவித்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் ஏறத்தாழ 152 மில்லியன் குழந்தைகள் குழந்தைத் தொழிலாளர்களாக தொழிற்சாலை உள்ளிட்ட இடங்களில் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதிலும், 73 மில்லியன் குழந்தைகள் அபாயகரமான சூழல் கொண்ட அமைப்பில் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.
வளர்ச்சியடையாத 47 நாடுகளில் 41% பெண்கள் 18 வயதிற்கு முன்பே திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளனர். அந்த 47 நாடுகளில் 33 நாடுகள் ஆப்பிரிக்காவில் உள்ளன.
10 மாற்றுத்திறனாளி குழந்தைகளில் மூன்று குழந்தைகள் பள்ளி கல்வியை பெறும் வாய்ப்பைக் கூட பெறுவதில்லை என்பதை உலக வங்கியின் ஆய்வு ஒன்று சுட்டிக்காட்டுகிறது.
200 மில்லியன் பெண்கள் மற்றும் குழந்தைகள் பிறப்புறுப்பு சிதைக்கப்படும் கொடூரத்தை அனுபவித்திருக்கிறார்கள்.
உடல் மற்றும் மன ரீதியில் பாலியல் வன்முறையை அனுபவிக்கும் மாற்றுத் திறனாளி குழந்தைகளின் எண்ணிக்கை நான்கு மடங்கு அதிகரித்துள்ளது.
ஆண் குழந்தைகளுக்கு ஆசைப்படும் பெற்றோரின் கருத் தேர்வு காரணமாக உலகம் முழுவதும் சுமார் 126 மில்லியன் பெண் குழந்தைகள் கருவிலேயே கொல்லப்பட்டுள்ளன.
சர்வதேச குழந்தைகள் உரிமைகள் நாளின் முக்கியத்துவம்
குழந்தைகளே எதிர்காலம் என உறுதியாக நம்பும் ஐ.நா அவை இந்த நாளை குழந்தைகளின் கல்விக்கு முக்கியத்துவம் அளிப்பது தொடர்பான விழிப்புணர்வு நாளாகவே கடைப்பிடிக்கிறது.
உலகளவில் உள்ள குழந்தைகளில் கல்வி, சுகாதாரம் போன்ற வாய்ப்பு வசதிகள் இல்லாத மில்லியன் கணக்கான குழந்தைகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதே அதன் முதன்மை நோக்கம்
1989 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகளின் மாநாட்டில் உலக நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட குழந்தைகளின் உரிமைகள் தொடர்பான 37 விதிகளை ஏற்று உறுதியாக பின்பற்ற இந்நாள் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.
அதே போல, உரிமைகளை பெறாத குழந்தைகளின் அடிப்படை உரிமைகளை உறுதி செய்யும் விழிப்புணர்வை உருவாக்குவதும் இந்நாள் கொண்டாட்டக் குறிக்கோள்களில் ஒன்றாகும்.
குழந்தைகள் உரிமைகள் தொடர்பான ஐ.நா மாநாட்டில் அறிவிக்கப்பட்ட விதிகளுக்கு 1992ஆம் ஆண்டில் இந்தியா ஒப்புதல் அளித்தது. அன்றிலிருந்து இந்நாட்டின் அனைத்து குழந்தைகளும் சிவில், அரசியல், சமூக, பொருளாதாரம் மற்றும் பண்பாட்டு தளங்களில் அடிப்படை உரிமைகளுடன் பிறந்தவர்கள் என அடையாளம் கொள்ளப்படுகின்றனர்.
* உயிர்வாழும் உரிமை
சிறந்த சுகாதாரமான வாழ்க்கை, சத்துணவு, தேசிய அடையாளம் ஆகியவற்றை பெறும் உரிமை.
* வளர்ச்சிக்கான உரிமை
கல்வி, பராமரிப்பு, ஓய்வு, பொழுதுபோக்கு, கலாச்சார நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான உரிமை.
*சமூகப் பாதுகாப்பு உரிமை
சுரண்டல்கள், கொடுமைகள், மனிதத் தன்மையற்ற முறையில் கீழ்த்தரமாக நடத்துதல், உதாசீனம் செய்தல் அல்லது புறக்கணித்தல் ஆகியவற்றிலிருந்து பாதுகாப்புப் பெறும் உரிமை.
குறிப்பாக நெருக்கடி காலம், போர், உடல் ஊனமுற்ற நிலை ஆகிய சமயங்களில் சிறப்புப் பாதுகாப்பு கோரும் தனித்த உரிமை.
*பங்கேற்பு உரிமை
கருத்து - எண்ணம் - சிந்தனைகளை வெளிப்படுத்தல், தகவலை அறிய முனைதல், மதநம்பிக்கைகள் தேர்ந்தெடுத்து பின்பற்றுவதில் சுதந்திரம் கொண்டிருக்கும் உரிமை.
இந்த உரிமைகள் அனைத்தும் ஒன்றையொன்று சார்ந்தவை. அதனாலேயே தனித்தனியே பிரித்து பார்க்க முடியாதவையாக இருக்கின்றன. ஆனாலும், அவற்றின் தன்மைகளின் அடிப்படையில் அவை பிரிக்கப்பட்டுள்ளன. இந்த உரிமைகள் அனைத்தையும் உலகில் உள்ள அனைத்து குழந்தைகளும் பெறவேண்டும்.
இந்தியாவின் குழந்தைகள், அதன் ஒட்டுமொத்த மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமானவர்களாக இருந்தாலும், அவர்களின் நலன்களுக்கு ஒருபோதும் முன்னுரிமை வழங்கப்படவில்லை என்பதே கசப்பான உண்மை. குறிப்பாக, ஒவ்வொரு நாளும் அவர்களின் உரிமைகள் மீறப்படுகின்றன.
கோவிட்-19 பாதிப்பும், குழந்தைகள் மீதான அதன் விளைவு (உலக பொருளாதார மன்றத்தின் அறிக்கை 2020)
ஊட்டச்சத்து குறைபாடு
2019 ஆம் ஆண்டில் ஐந்து வயதுக்குட்பட்ட 47 மில்லியன் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். 14.3 மில்லியன் குழந்தைகள் அதில் கடும் பாதிப்பை அடைந்துள்ளனர்.
ஊட்டச்சத்துக்கள் குறைபாடுகள் குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைக்கிறது. நீண்டகாலத்திற்கு தேவையான உடல் வளர்ச்சியில் தாமதத்தை ஏற்படுத்துகிறது. அத்துடன், மிகக் கடுமையான வடிவத்தில் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கின்றது.
தொற்றுநோயின் சமூக பொருளாதார தாக்கத்தால் ஐந்து வயதுக்குட்பட்ட 6.7 மில்லியன் குழந்தைகள் பாதிக்கப்படுவார்கள் என்று யூனிசெஃப் அமைப்பின் சார்பில் அண்மையில் வெளியிடப்பட்ட அறிக்கையில் எச்சரித்திருப்பது கவனிக்கத்தக்கது.
கல்வி
ஆகஸ்ட் மாத நிலவரப்படி, உலகெங்கிலும் ஒரு பில்லியனுக்கும் அதிகமான குழந்தைகள் பள்ளி மூடல்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மார்ச் மாதம் வெளியான யூனெஸ்கோவின் அறிக்கையின்படி, இந்த எண்ணிக்கை 1.5 பில்லியனுக்கும் அதிகமாக மாறியிருப்பது அறியமுடிகிறது.
கரோனா பாதிப்புக்கு முன்பான காலக்கட்டத்தில், கல்வி கற்கும் வாய்ப்பற்ற குழந்தைகளின் எண்ணிக்கை 250 மில்லியனுக்கும் அதிகமாக இருந்தது.
ஐ.நா.வின் கொள்கை சுருக்கமான ‘கோவிட்-19 பாதிப்பும், கல்விப்புலம் மீதான அதன் தாக்கமும்' என அறிக்கையில், "தொற்றுநோயின் காரணமாக விளைந்த பொருளாதார வீழ்ச்சியின் தாக்கத்தின கூடுதலாக 23.8 மில்லியன் குழந்தைகளும், சிறார்களும் அடுத்த ஆண்டு பள்ளிக் கல்வியை விட்டு வெளியேறலாம் அல்லது அணுக முடியாத நிலைக்கு செல்லலாம்" என கூறியிருப்பது கவனிக்கத்தக்கது.
விலையில்லா பள்ளி உணவு
தொற்றுநோயின் உச்சத்தில், அதனைத் தடுக்கும் வகையில் உலகெங்கிலும் நடைமுறைப்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக பள்ளிகள் மூடப்பட்டன. அதனால் ஏறத்தாழ 370 மில்லியன் குழந்தைகள் விலையில்லா பள்ளி உணவை இழந்துள்ளனர். தற்போது அந்த எண்ணிக்கை 346 மில்லியனை அடைந்துள்ளது என உலக உணவு திட்டம் தகவல் வெளியிட்டுள்ளது.
தடுப்பூசி சீர்குலைவு
ஒரு வயதிற்குட்பட்ட சுமார் 80 மில்லியன் குழந்தைகள் தட்டம்மை போன்ற நோய்களுக்கு ஆளாக அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.