கூகுள் தேடலில் (Google Search) இந்தியாவின் மோசமான மொழி எது என்ற கேள்விக்கு, கன்னடம் என முடிவுகள் கிடைத்தன. இது கர்நாடக மாநிலத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் கன்னட மொழி பேசும் மக்கள், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சியினர் கூகுள் நிறுவனத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.
2500 ஆண்டுகள் பழமையான கன்னட மொழி
கன்னட மொழி 2500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்றும், கன்னட மொழியைச் சிறுமை படுத்திய கூகுள் நிறுவனம் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கர்நாடக பண்பாட்டு மற்றும் வனத்துறை அமைச்சர் அரவிந்த் லிம்பாவாலி தெரிவித்திருந்தார். இது முதலில் debconsolidationsquad.com என்ற வலைதளத்தில் காணப்பட்டுள்ளது. ஆனால், தற்போது அந்த வலைத்தளம் பேஜ் நாட் ஃபவுண்ட்(Page Not found) எனக் காட்டுகிறது.
கூகுள் நிறுவனம் மீது புகார்:
கன்னட சார்பு அமைப்பான 'கர்நாடக ரக்ஷனா வேதிகே', கூகுள் நிறுவனத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக்கோரி பையப்பனஹள்ளி நிலையத்தில் புகார் அளித்துள்ளது. மேலும், கன்னடத்தை நாட்டின் மிக மோசமான மொழியாகக் காட்டியதற்காக, 'கன்னட சாகித்ய பரிஷத்' சார்பிலும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மன்னிப்புக் கோரிய கூகுள்:
இந்தியாவின் மோசமான மொழி கன்னடம் எனக் காட்டப்பட்டதற்குக் கூகுள் நிறுவனம் மன்னிப்புக்கோரியுள்ளது. மேலும், கூகுள் தேடு தளத்தில் கன்னட மொழி தொடர்பாகப் பதிவான தவறான தகவல்களை கூகுள் நீக்கியுள்ளது. மேலும், தனது ட்விட்டர் பக்கத்தில், மக்களின் உணர்ச்சிகளைப் புண்படுத்தியதற்காக மன்னிப்புக் கோருகிறோம் எனப் பதிவிட்டுள்ளனர்.