உத்தரபிரதேசம்: காவலர் பணி மிகவும் கடுமையான வேலைகளில் ஒன்றாகும். இருப்பினும் காவலர் பணியின் மீது கொண்டு காதல் காரணங்களால் அந்த வேலையை அடைவதை தன் வாழ்நாள் கனவாக இளைஞர்கள் கொண்டு உள்ளனர். அதேநேரம் காவலர் பணியில் உள்ள பெரும் குறை என்றால் குடும்பத்தினருடன் நேரம் செலவிட முடியாது, மற்றவர்கள் போல் உறவினர்கள், பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள முடியாது. அதிலும் முக்கியமாக எளிதில் விடுமுறை கிடைக்காது.
இப்படி பல்வேறு துன்பங்களுக்கு மத்தியில் காவலர்கள் தங்கள் பணியை கவனித்து வருகின்றனர். சில நேரம் பணிச் சுமை உள்ளிட்ட காரணங்களால் காவலர்கள் தவறான முடிவுகளை எடுக்கும் அளவுக்கு தள்ளப்படுகின்றனர். அது போன்ற நிகழ்வுகளை குறைக்க அரசு தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
குறிப்பிட்ட நேரம் வேலை, வார விடுமுறை, விருப்ப விடுமுறை, உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் காவலர்களுக்கு வழங்கப்படுகின்றன. இருப்பினும் இந்த நடவடிக்கைகள் அனைத்து நேரத்திலும் மேற்கொள்ளப்படுகிறதா என்று கேட்டால் சந்தேகம் தான். அந்த வகையில் தன் மனைவியுடன் ஹோலி பண்டிகைக்கு செல்ல காவலர் ஒருவர் தன் உயர் அதிகாரியிடம் விடுமுறை கேட்ட நிகழ்வு சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
உத்தரபிரதேசம் மாநிலம் பரூக்காபாத்தை சேர்ந்த காவல் ஆய்வாளர் ஒருவர் தன் உயர் அதிகாரிக்கு விடுமுறை வேண்டி கடிதம் எழுதி உள்ளார். தனக்கு தன் மனைவிக்கு திருமணமாகி 22 ஆண்டுகள் நிறைவு பெற்றது. இதில் தன் மனைவி திருமணம் ஆனது முதல் ஏறத்தாழ 22 ஆண்டுகள் தன் குடும்பத்தினருடன் ஹோலி பண்டிகையை கொண்டாடவில்லை.
இந்த ஆண்டு ஹோலி பண்டிகையை தன் பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் அவரது சொந்த ஊரில் கொண்டாட விரும்புகிறார். மேலும் ஹோலி பண்டிகைக்கு சொந்த ஊர் செல்ல விடுமுறை எடுக்கக் கோரி தன்னிடம் தொடர்ந்து சண்டையிட்டு வருகிறார். இதனால் தன்னால் சரி வர பணி செய்ய முடியவில்லை எனக் கூறியுள்ளார்.
மேலும் தன் மனைவியுடன் ஹோலி பண்டிகைக்கு சொந்த ஊர் செல்ல 10 நாட்கள் விடுமுறை அளிக்குமாறு அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார். இந்த கடிதத்தை பெற்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அசோக் குமார் மீனா, சிரித்து உள்ளார். மேலும் காவல் ஆய்வாளருக்கு 5 நாட்கள் விடுமுறையில் செல்ல அனுமதி அளித்து உள்ளார்.
இந்நிலையில், காவல் ஆய்வாளரின் விடுமுறை கடிதம் சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது. காவல் ஆய்வாளரின் கடிதத்தை பகிரும் இணையதளவாசிகள் அவருக்கு அனுதாபம் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுக்கு மேலும் 2 நாள் சிபிஐ காவல்