லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலம் ஃபிரோசாபாத்தில் உள்ள அடுக்குமாடி கட்டடத்தில் இன்று (நவம்பர் 30) நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்தனர். நான்கு பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து ஃபிரோசாபாத் போலீசார் தரப்பில், இந்த அடுக்குமாடி கட்டடத்தின் தரை தளத்தில் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் பர்னிச்சர் கடை இருந்தது. இந்த கடையில் நள்ளிரவில் திடீரென தீப்பிடித்தது. இந்த தீ மளமளவென முதல் மற்றும் 2ஆவது தளத்திற்கும் பரவியது.
இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் அடிப்படையில் தீயணைப்புத்துறையிடருடன் சம்பவயிடத்திற்கு விரைந்தோம். பல மணி நேரம் போராடி தீயை அணைத்தோம். இருப்பினும் 6 உயிரிழப்புகள் ஏற்பட்டுவிட்டன. அந்த வகையில், முதல் தளத்தின் குடியிருந்த மனோஜ் (36), அவரது மனைவி நீரஜ் (33), அவர்களது மகன்கள் பாரத் (15), ஹர்ஷ்வர்தன் (13), மனோஜின் சகோதரி ஷிவானி (22) மற்றும் அவரது 6 மாத பெண் குழந்தை தேஜஸ்வி ஆகியோர் தீயில் கருகி உயிரிழந்தனர்.
இரண்டாவது தளத்தில் இருந்த கடையின் உரிமையாளர் ராமன் ராஜ்புத் (65), அவரது மகன் நிதின் (25) மற்றும் மனோஜின் மூன்றாவது மகள் உன்னதி (8) தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். முதல்கட்ட தகவலில் கடையில் இருந்த பேட்டரி வெடித்ததில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது என்பது தெரியவந்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது. இதனிடையே முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று அறிவித்தார்.
இதையும் படிங்க: சலிப்பான வகுப்பு... மாணவி போட்ட பதிவு... ஆசிரியர் மீது வழக்கு...