ஜோத்பூர்: சவூதி அரேபியாவின் ஜெட்டாவில் இருந்து இன்று (பிப். 7) டெல்லி நோக்கி புறப்பட்ட இண்டிகோ விமானம் ராஜஸ்தான் வான்பரப்பில் சென்றுகொண்டிருந்தது. அந்த நேரத்தில் விமானத்தில் பயணித்த மூதாட்டு ஒருவருக்கு மாராடைப்பு ஏற்பட்டதால் காலை 11 மணியளவில் திடீரென ஜோத்பூர் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
இதுகுறித்து ஜோத்பூர் விமான நிலையம் தரப்பில், இந்த விமானத்தில் ஜம்மு-காஷ்மீரின் ஹசாரிபாக்கில் வசிக்கும் மித்ரா பானோ என்பவர் அவரது மகன் முசாபர் உடன் பயணம் செய்தார். இவருக்கு நடுவானில் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் விமானிகள் காலை 10:45 அளவில் ஜோத்பூர் விமான நிலையத்தை தொடர்பு கொண்டு அவசரமாக தரையிறக்க கோரினர்.
அதனடிப்படையில் விமான நிலைய ஓடுபாதை தயார் படுத்தப்பட்டது. ஆம்புலன்ஸ் தயார் நிலையில் நிறுத்தப்பட்டது. இதையடுத்து 11:00 மணியளவில் விமானம் தரையிறங்கியது. அதன்பின் மித்ரா பானோவுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, கோயல் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.
ஆனால், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். அதோடு மாரடைப்பு காரணமாக உயிரிழப்பு நேர்ந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரது உடலை ஜம்மு-காஷ்மீர் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இண்டிகோ விமானம் விமானம் ஒரு மணி நேரத்தில் மீண்டும் டெல்லி நோக்கி புறப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சிறுத்தையிடம் மல்லுகட்டி மான் குட்டியை மீட்ட 65 வயது மூதாட்டி