மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நிதிநிலை அறிக்கையை கடந்த பிப்ரவரி ஒன்றாம் தேதி தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து, நிதிநிலை அறிக்கையில் பல்வேறு துறைகளுக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவம் குறித்து பிரதமர் மோடி இணைய மாநாடு மூலம் நாட்டு மக்களுக்கு விளக்கிவருகிறார்.
இந்நிலையில், சுகாதாரத்திற்கு நிதி ஒதுக்கியது குறித்து இன்று பேசிய மோடி, ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் தரும் வேலையில் சுகாதாரத் துறையை மேம்படுத்த முழுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாக தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், "நாட்டு மக்களை உடல்நலத்துடன் வைத்திருக்க அனைத்து முனைகளிலும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
நோய் தடுப்பு மற்றும் உடல்நலன், சுகாதார உள்கட்டமைப்பு மற்றும் மருத்துவ பணியாளர்கள், ஏழைகளிலும் ஏழைகளுக்கான சிகிச்சை, இந்திர தனுஷ் திட்டத்தை பழங்குடி மக்களுக்கு விரிவுப்படுத்துவது உள்ளிட்ட நான்கு முனைகளிலும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சுகாதாரத் துறைக்கு அதிக அளவில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. நாட்டு மக்கள் அனைவருக்கும் தரமான மருத்துவத்தை அளிப்பதில் எங்களின் உறுதி இதன் மூலம் வெளிப்படுகிறது.
மருத்துவ உபகரணங்களிலிருந்து மருந்துகள்வரை, வென்டிலேட்டர்கள் முதல் தடுப்பூசிகள்வரை, விஞ்ஞான ஆராய்ச்சி முதல் கண்காணிப்பு உள்கட்டமைப்புவரை, மருத்துவர்கள் முதல் தொற்றுநோயியல் நிபுணர்கள்வரை, சுகாதார பேரிடர் ஏற்படும்பட்சத்தில் இந்தியாவை தயாராக வைக்க முக்கியத்தவம் அளிக்கப்படுகிறது" என்றார்.