டெல்லி: இந்தியாவில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனால் மத்திய, மாநில அரசுகள் கரோனா தடுப்பூசி போடும் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது. 60 வயதிற்கு மேற்பட்ட தகுதியுள்ளவர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. அதேபோல் 15-18 வயதினருக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்தப்பட்டுவருகிறது.
இந்த நிலையில் மத்திய சுகாதாரத்துறை, "இந்தியாவில் நேற்று (ஜன.28) வரை மொத்தம் 164.96 (1,64,96,32,220) கோடி டோஸ் கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. நேற்று ஒரே நாளில் மட்டும் 48 லட்சம் தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன.
இதில் 13.56 லட்சம் பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசியும், 29.34 லட்சம் பேருக்கு இரண்டாம் டோஸ் தடுப்பூசியும் செலுத்தப்பட்டது. 15-18 வயதிற்குட்பட்டவர்கள் 4.97 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. 6.6 லட்சம் பேருக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளது. அந்த வகையில் நாடு முழுவதும் 95 விழுக்காடு மக்களுக்கு முதல் தவணை கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவில் நேற்று 2 லட்சத்து 51 ஆயிரத்து 209 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: புதிய தலைமை பொருளாதார ஆலோசகராக ஆனந்த நாகேஸ்வரன் நியமனம்!