டெல்லி: நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 35 லட்சத்துக்கும் அதிகமாக கரோனா தடுப்பு மருந்துகள் பயனாளர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும், மொத்தமாக இதுவரை 10 கோடிக்கும் அதிகமான பயனாளர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தியிருப்பதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக மத்திய அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியா ஒரு நாளைக்கு மிக உயர்ந்த எண்ணிக்கையில் கரோனா தடுப்பூசியை மக்களுக்கு செலுத்தி வருகிறது. இன்று (ஏப்ரல் 11) காலை 7 மணி வரை மொத்தம் 15 லட்சத்து 17ஆயிரத்து 963 அமர்வுகள் மூலம் 10 கோடியே 15 லட்சத்து 95 ஆயிரத்து 147 தடுப்பூசி மருந்துகள் பயனாளர்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 35 லட்சத்துக்கும் மேல் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. இதில் 42,553 இடங்களில் 31லட்சத்து 22 ஆயிரத்து 109 பயனாளிகளுக்கு முதல் டோஸும், 3லட்சத்து 97ஆயிரத்து 878 பயனாளர்களுக்கு 2ஆவது டோஸும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இந்தியாவில் கரோனா தாக்கம்
உலகளவில் தடுப்பூசி எடுத்துக்கொள்ளும் பயனாளர்களின் சராசரி கணக்கீடுகளின் படி, ஒரு நாளைக்கு 38லட்சத்து 34ஆயிரத்து 574 என்ற எண்ணிக்கையைக் கொண்டு இந்தியா முதலிடத்தில் உள்ளது. இச்சூழலில், கடந்த 24 மணி நேரத்தில் ஒரு லட்சத்து 52ஆயிரத்து 879 பேருக்கு கூடுதலாக கரோனா தொற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், உத்தர பிரதேசம், டெல்லி, கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, குஜராத், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட பத்து மாநிலங்களில் கரோனா தொற்று அதிகரித்துவருகிறது. மேலும், இந்த பத்து மாநிலங்களில் மட்டுமே நூற்றில் 80.92 விழுக்காடு பேர் புதிதாக கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களாக கண்டறியப்பட்டுள்ளனர்.
நாட்டில் ஒட்டுமொத்தமாக ஒரு கோடியே 20லட்சத்து 81ஆயிரத்து 443பேர் கரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். இதன் விகிதம் 90.44 விழுக்காடாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 839 இறப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளது” என குறிப்பிடப்பட்டுள்ளது.