டெல்லி: ரஷ்யா - உக்ரைன் நாடுகளுக்கு இடையே கடந்த மாதம் 24ஆம் தேதி முதல் போர் நடைபெற்று வருகிறது. உக்ரைன் நாட்டில் சிக்கிய இந்தியர்களை மீட்பதற்கு அங்குள்ள இந்தியத் தூதரகம் தொடர் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், உக்ரைன் நாட்டின் தலைநகர் கீவ்வில் உள்ள இந்தியத் தூதரகத்தை, போலாந்து நாட்டிற்கு தற்காலிகமாக மாற்றியுள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "உக்ரைனில் தொடர்ந்து மாற்றமடைந்து வரும் பாதுகாப்புச்சூழல் காரணமாக, குறிப்பாக நாட்டின் மேற்குப் பகுதியில் நடைபெறும் தாக்குதலால் உக்ரைனில் உள்ள இந்தியத்தூதரகம் தற்காலிகமாக போலாந்து நாட்டிற்கு மாற்றப்படுகிறது. சூழல் சீரான பின்னர், இம்முடிவு குறித்து மறுபரிசீலனை செய்யப்படும்" எனக் குறிப்பிட்டுள்ளது.
முன்னதாக, இந்தியாவின் பாதுகாப்புத்தயார் நிலை குறித்தும், நடப்பு உலகளாவிய சூழல் குறித்தும் ஆலோசிக்க பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் உயர் மட்டக்கூட்டம் இன்று (மார்ச் 12) நடந்தது. உக்ரைனின் போர்த்தாக்குதலில் சிக்கி உயிரிழந்த கர்நாடக மாணவர் நவீன் சேகரப்பாவின் உடலை மீட்புதற்கு அனைத்து முயற்சிகளையும் எடுக்க வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: உக்ரைனில் 35 பேர் பலி - ரஷ்யா நடத்திய கொடூரத்தாக்குதல்