புதுச்சேரி: காங்கிரஸ் கூட்டணிக் கட்சி சார்பில் புதுச்சேரியில் ஒரு தொகுதியில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இன்று (மார்ச் 31) முதலியார்பேட்டை கட்சித் தலைமை அலுவலகத்தில் தேர்தல் அறிக்கையானது வெளியிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அக்கட்சியின் தட்டாஞ்சாவடி தொகுதி வேட்பாளர் சேது செல்வம், முன்னாள் அமைச்சர் விசுவநாதன், முன்னாள் எம்எல்ஏ கலைநாதன் ஆகியோர் பங்கேற்றனர்.
தேர்தல் அறிக்கையின் சிறப்பம்சங்கள்:
- புதுச்சேரியில் மூடப்பட்ட மூன்று பஞ்சாலைகள் மீண்டும் திறக்க நடவடிக்கை.
- நவீனமயமாக்கவும் புதுச்சேரியில் ஜவுளி பூங்கா அமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
- அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு நல வாரியம் உடனடியாக வடிவம் பெற நடவடிக்கை எடுக்கப்படும்.
- காலியாக உள்ள 10 ஆயிரம் அரசுப் பணியிடங்கள் நிரப்பப்படும்.
- மாநில அரசு பணியிடங்களை நிரப்ப மாநில அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம் அமைத்திட வலியுறுத்தப்படும்.
- வங்கிகளிலும், அரசு நிறுவனங்களிலும் மாணவர்கள் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்ய வலியுறுத்தப்படும்.
- நீட் தேர்விலிருந்து புதுச்சேரிக்கு விலக்கு அளிக்க வலியுறுத்தப்படும்.
- கலை அறிவியல் கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை நுழைவுத் தேர்வு என்ற மத்திய அரசின் அறிவிப்பு ரத்துசெய்ய வலியுறுத்தப்படும்.
- தனியார் தொழிற்சாலைகளில் உள்ளூர் இளைஞர்களுக்கு 75 விழுக்காடு வேலைவாய்ப்பு வழங்க சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.
இதையும் படிங்க: இடதுசாரிகள் சில தங்க துண்டுகளுக்காக, கேரள மக்களின் முதுகில் குத்துகிறார்கள்- வி முரளிதரன்