நாடு முழுவதும் கரோனா இரண்டாம் அலை தீவிரமாகப் பரவி வருகிறது. டெல்லி உள்ளிட்ட சில மாநிலங்களின் மருத்துவமனைகளில் படுக்கைகள், ஆக்ஸிஜன் பற்றாக்குறை என பல சவால்களை அம்மாநில மக்கள் சந்தித்து வருகின்றனர்.
இந்நிலையில், டெல்லி கன்டோன்மென்ட் சிறப்பு கரோனா மருத்துவமனையை இந்திய ராணுவம் நிறுவியுள்ளது. இந்த மருத்துவமனை கரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கக் கூடிய வசதிகளுடன் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ராணுவத்தினர் சிகிச்சைப் பெற்று வந்த அந்த மருத்துவமனையை, கரோனா நோயாளிகளுக்காக மாற்றும்போது முதலில் ஏற்படுத்தப்பட்ட 340 படுக்கைகளில், 250 படுக்கைகளுக்கு ஆக்ஸிஜன் வசதி ஏற்படுத்தப்பட்டது.
இங்கு நாளைக்குள் தீவிர சிகிச்சைக்கென 12 முதல் 35 படுக்கைகள் ஏற்பாடு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஏப்ரல் 30-ஆம் தேதிக்குள் மொத்தப் படுக்கைகளின் எண்ணிக்கையை 650ஆக உயர்த்தவும், அவற்றுள் 450 படுக்கைகளை ஆக்ஸிஜன் வசதியுடன் ஏற்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இது மட்டுமின்றி, ஆக்ஸிஜன் வசதியுடைய படுக்கை எண்ணிக்கையை ஜூன் இரண்டாம் வாரத்திற்குள் 900ஆக உயர்த்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், அங்கு அனுமதிக்கப்பட்டவர்களின் தகவல்கள் மற்றும் மருத்துவ ஆலோசனைகளுக்கு என தகவல் தொடர்பு மையமும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.