புனே: மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் உள்ள சிம்பயாசிஸ் திறன் மற்றும் தொழில்சார்ந்த பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்திருந்த "ஊடக மற்றும் பொழுதுபோக்கு தொழிலில் மாறிவரும் சூழல் 2022" என்ற தலைப்பிலான தேசிய மாநாட்டில், மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், "நாடு முழுவதும் ஏவிஜிசி (அனிமேஷன், விஷுவல் எஃபெக்ட்ஸ், கேமிங் மற்றும் காமிக்ஸ்) துறையில் திடமான டிஜிட்டல் அடித்தளம் இடப்பட்டு வருவதுடன், உள்நாட்டு மற்றும் உலகளாவிய தேவைக்கு ஏற்ப, இத்துறையை உலகத்தரம் வாய்ந்த படைப்பாற்றல் திறன் மிக்கதாக மேம்படுத்த சிறப்பு நடவடிக்கை குழுவை அரசு அமைத்துள்ளது.
ஊடக மற்றும் பொழுதுபோக்கு சூழலியல் துறை என்பது பிரகாசிக்கும் தொழில்துறையாக இருப்பதோடு, 2025ஆம் ஆண்டுக்குள் ஆண்டுக்கு 4 லட்சம் கோடி ரூபாயும், 2030ஆம் ஆண்டுக்குள் ஏழரை லட்சம் கோடி ரூபாயும் வருமானம் கொண்ட தொழில்துறையாக மாறும் வல்லமையை பெற்றதாக உள்ளது.
மேலும் ஒலி-ஒளி சேவைத்துறையை, 12 முன்னோடி சேவைத்துறைகளில் ஒன்றாக அரசு அறிவித்திருப்பதோடு, நீடித்த வளர்ச்சிக்கான முக்கிய கொள்கை அறிவிப்புகளையும் வெளியிட்டிருக்கிறது. தரமான கதையம்சங்களைக் கொண்ட டிஜிட்டல் யுகத்தை நோக்கி நாம் அதிவேகமாக சென்று கொண்டிருக்கும் வேளையில், வானொலி, திரைப்படம் மற்றும் பொழுதுபோக்குத் தொழில்துறை பெருமளவு வேலை வாய்ப்புகளைக் கொண்ட துறையாக உள்ளது.
வீடியோ எடிட்டிங், கலர் கிரேடிங், விஷுவல் எஃபக்ட்ஸ், சவுண்டு டிசைன், ரோடோஸ்கோபிங், 3டி மாடலிங் போன்ற புதிதாக உருவெடுக்கும் துறைகளில் ஏராளமான வேலைவாய்ப்புகள் உருவாகி வருகின்றன. கரோனா பெருந்தொற்று காலத்திலும் சுமார் 50 ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தொடங்கப்பட்டன.
இந்தியத் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனம் மற்றும் சத்யஜித்ரே திரைப்பட மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனம் போன்ற திரைப்படப் பயிற்சி நிறுவனங்களிலிருந்து உருவாகும் திறமைவாய்ந்த படைப்பாளிகள், மேலும் பல ஸ்டார்ட்அப் நிறுவனங்களைத் தொடங்குவார்கள்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: தெலுங்கில் பெயர் பலகைகளை எதிர்பார்த்தேன் - அமெரிக்காவில் தலைமை நீதிபதி என்.வி.ரமணா