டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி அபுதாபி பட்டத்து இளவரசர் ஷேக் முகமது பின் சயத் அல் நயான் இடையே நடந்த மெய்நிகர் உச்சிமாநாட்டைத் தொடர்ந்து, இரு தரப்பும் எதிர்கால ஒத்துழைப்பை விரிவாக்குவதற்கான திட்டத்தை உருவாக்கி வர்த்தக உறவுகளை மேம்படுத்துவதற்காக இந்தியா - ஐக்கிய அரபு அமீரகம் வெள்ளிக்கிழமை விரிவான பொருளாதாரக் கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
இந்த வர்த்தக ஒப்பந்தத்தில் இந்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் - ஐக்கிய அமீரக பொருளாதார அமைச்சர் அப்துல்லா பின் தவூக் அல் மரி ஆகிய இருவரும் கையெழுத்திட்டனர். மெய்நிகர் உச்சி மாநாட்டில், மோடியும் அல் நயானும்,
- 'இந்தியா - ஐக்கிய அரபு எமிரேட்ஸின் விரிவான மூலோபாய கூட்டாண்மை: புதிய எல்லைகள், புதிய மைல்கல்'
என்ற தலைப்பில் ஒரு கூட்டுத் தொலைநோக்கு அறிக்கையை வெளியிட்டனர். பொருளாதாரம், எரிசக்தி, காலநிலை நடவடிக்கை, வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள், திறன்கள் மற்றும் கல்வி, உணவுப் பாதுகாப்பு, சுகாதாரம், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரு நாடுகளுக்கிடையே வர்த்தகத்தைப் பகிர்ந்துகொள்வது என முடிவெடுக்கப்பட்டது.
அபுதாபியின் பட்டத்து இளவரசருடன் மெய்நிகர் உச்சி மாநாட்டில் பங்கேற்றதில் மகிழ்ச்சியடைவதாக நரேந்திர மோடி ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளார். கடந்த ஏழு ஆண்டுகளில் இந்தியா - ஐக்கிய அரபு அமீரகம் விரிவான மூலோபாய கூட்டாண்மை மிகப்பெரிய மாற்றத்திற்கு உட்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.
"இந்த விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தமானது நமது பொருளாதார உறவுகளில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நான் நம்புகிறேன்.
- மேலும் இன்று கையெழுத்தான இந்த வர்த்தக ஒப்பந்தம் நமது பொருளாதார உறவில் ஒரு கேம் சேஞ்சர் ஆகும்.
மேம்பட்ட சந்தை அணுகல் மூலம், இருதரப்பு பொருள்களின் வர்த்தகம் 100 பில்லியனாகவும், சேவைகள் 15 பில்லியனாகவும் அடுத்த ஐந்தாண்டுகளில் உயரும்" என்று மோடி ட்வீட் செய்துள்ளார்.
இது நாடுகளுக்கிடையேயான ஒப்பந்தம் இருதரப்பு வர்த்தகத்தை ஐந்தாண்டுகளில் தற்போதுள்ள 60 பில்லியன் அமெரிக்க டாலரிலிருந்து 100 டாலராக உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவின் 75ஆவது சுதந்திர நாள், ஐக்கிய அரபு அமீரகம் தோற்றுவிக்கப்பட்ட 50ஆவது ஆண்டு நினைவு கூட்டு அஞ்சல் தலைகளை இருநாட்டுத் தலைவர்களும் வெளியிட்டனர்.
இதையும் படிங்க: உக்ரைன் விவகாரம்: இந்தியாவின் நிலைப்பாட்டை வரவேற்ற ரஷ்யா!