டெல்லி: ஐ.நா. சபையின் சிறுபான்மை பிரச்னைகள் குறித்த சிறப்பு அறிக்கையாளர், பெர்னாண்ட் டி வரென்னெஸ் மற்றும் மத நம்பிக்கை, சுதந்திரம் குறித்த சிறப்பு அறிக்கையாளர் அகமது ஷாஹீத் ஆகியோர் கடந்த 2019ஆம் ஆண்டு ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு சிறப்பு அந்தஸ்தை இந்தியா திரும்பப் பெற்றதற்கு எதிராக கருத்துக்களை தெரிவித்தனர்.
மேலும் அவர்கள், ஜம்மு-காஷ்மீரின் சுயாட்சியை முடிவுக்குக் கொண்டு வந்த, இஸ்லாமிய மற்றும் பிற சிறுபான்மையினரின் முந்தைய அரசியல் பங்களிப்பைக் குறைக்கக் கூடிய புதிய சட்டங்களை இயற்றிய இந்தியாவின் முடிவு கவலை அளிப்பதாகத் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக பதிலளித்த இந்திய வெளிவிவகார அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாஸ்தவா, "ஜம்மு-காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் தவிர்க்க முடியாத பகுதி. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் நிலையை இந்திய யூனியன் பிரதேசமாக மாற்றுவது தொடர்பாக இந்திய நாடாளுமன்றம் 2019 ஆகஸ்ட் 5ஆம் தேதி எடுக்கப்பட்ட முடிவை இவர்களது கருத்துகள் புறக்கணிப்பதாக உள்ளது.
மாவட்ட வளர்ச்சி கவுன்சில்களுக்கான உள்ளாட்சித் தேர்தல்களை வெற்றிகரமாக நடத்துவதன் மூலமும், நல்லாட்சியை உறுதி செய்வதன் மூலமும் பல ஆண்டுகளாக நடைபெற்றுவந்த பாகுபாடுகளை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளோம். அடிமட்ட அளவில் ஜனநாயகத்தை நிலை நிறுத்துவதை நோக்கமாகக் கொண்ட இந்திய அரசின் இந்த நடவடிக்கைகளை கணக்கில் எடுத்துக் கொள்ள அவர்கள் தவறிவிட்டனர்.
ஜம்மு-காஷ்மீருக்கு இந்தியாவின் பிற பகுதிகளுக்கு பொருந்தக்கூடிய சட்டங்களை அளிப்பதால் உண்டாகும் நேர்மறையான விளைவுகளை இவர்கள் எண்ண மறுத்துள்ளனர். அரசின் இந்த முடிவினால், ஜம்மு காஷ்மீர் மக்கள் இந்திய நாட்டின் சாதாரண மனிதர்களுக்கு கிடைக்கும் உரிமையை பல ஆண்டுகளுக்குப் பிறகு பெற்றுள்ளனர் என்பதை மறக்க முடியாது" என்றார்.