டெல்லி : உலக கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த அக்டோபர் மாதம் 5ஆம் தேதி தொடங்கி நவம்பர் 19ஆம் தேதி வரை இந்தியாவின் பல்வேறு இடங்களில் வெகு விமரிசையாக நடைபெற்றது. விறுவிறுப்பாக நடந்த தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி 6வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் கவனிக்கத்தக்க வீரர்களில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியும் ஆவார். 33 வயதான முகமது ஷமி 6 போட்டிகளில் விளையாடி 23 விக்கெடுகளை வீழ்த்தினார். இந்நிலையில், நடப்பாண்டுக்கான அர்ஜூனா விருதுக்கு முகமது ஷமியின் பெயர் பரிந்துரைக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்தியாவில் சிறந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் விருது அர்ஜூனா விருது. இந்தியாவில் விளையாட்டு வீரர் வீராங்கனைகளுக்கு வழங்கப்படும் இரண்டு உயர்ந்த விருது அர்ஜூனா விருது ஆகும். விளையாட்டு துறையில் சாதனை படைத்தவர்களுக்கு நாட்டின் உயர்ந்த விருதான கேல் ரத்னா விருது வழங்கப்படுகிறது.
அந்தந்த விளையாடு அமைப்புகள் பரிந்துரைக்கும் வீரர் வீராங்கனைகளின் பட்டியலை மத்திய தேர்வு குழு இறுதி செய்து விருத்துக்கான பட்டியலை வெளியிடும். இந்த நிலையில், நடப்பாண்டுக்கான அர்ஜூனா விருத்துக்கு உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் அபாரமாக செயல்பட்ட முகமது ஷமிக்கு வழங்குமாறு இந்திய கிரிக்கெட் வாரியம் பரிந்துரைத்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
அர்ஜூனா விருதுக்கான பரிந்துரை பட்டியலை மத்திய விளையாட்டு துறை அமைச்சகத்திற்கு முன்னரே பிசிசிஐ அனுப்பிய நிலையில், முகமது ஷமியின் பெயரை சேர்க்க பிசிசிஐ கோரிக்கை விடுத்து உள்ளதாக விளையாட்டு அமைச்சகம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க : சாதனை பட்டியலில் தெலங்கானா அரசு பேருந்துகள் - அப்படி என்ன சாதனை தெரியுமா?