இட்டாநகர்: இந்திய எல்லைகளில் உள்ள சவால்களை முறியடிக்கும் அனைத்து திறன்களும் நமது ராணுவத்திடம் உள்ளது. எந்த சூழ்நிலையையும் சமாளிக்க தயாராக உள்ளது. இருப்பினும், இந்தியா ஒருபோதும் போரை ஊக்குவிப்பதில்லை, அண்டை நாடுகளுடன் எப்போதும் நல்லுறவைப் பேணவே விரும்புகிறது.
இது ராமர் மற்றும் புத்தரின் போதனைகளிலிருந்தும் பெறப்பட்ட நமது தத்துவத்தின் வெளிப்பாடாகும் என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். அதோடு மோதல்போக்கு தூண்டப்பட்டால் பதிலடி கொடுக்கவும் தயாராக உள்ளோம் என்று தெரிவித்தார். பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்க அருணாச்சல பிரதேசம் சென்றபோது இவ்வாறு தெரிவித்தார்.
முன்னதாக, அருணாச்சல பிரதேசத்தின் போலெங்கில் இருந்து பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அருணாச்சல், லடாக், மிசோரம் மாநிலங்களில் தொலைதூர மருத்துவ பரிசோதனை நிலையங்களை காணொலி வாயிலாக இன்று (ஜனவரி 3) திறந்துவைத்தார்.
அப்போது பேசிய ராஜ்நாத் சிங், மலை கிராம மக்களுக்கு அவரச மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சை உதவிகளை உரிய நேரத்தில் வழங்குவதற்காக தொலைதூர மருத்துவ பரிசோதனை நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. இந்த நிலையங்கள் உள்ளூர் மக்களின் சுகாதாரத் தேவைகளுக்கு பெரும் உதவியாக இருக்கும் எனத் தெரிவித்தார்.
அதன்பின் சியாங்கில் புதிதாக அமைக்கப்பட்ட சாலைகளை திறந்துவைத்தார். இதுகுறித்து பேசுகையில், வடகிழக்கு பகுதிகளில் உள்ள மக்களுக்கு சிறந்த மற்றும் சீரான பயண வசதிகளை மேம்படுத்துவதில் பிரதமர் மோடி அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த சாலைகள் பொருளாதார ரீதியாகவும், பயன்பாட்டுரீதியாகவும் முக்கிய பங்கு வகிக்கும் எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: இந்தியாவின் அறிவியல் தற்சார்பை நோக்கமாக கொண்டிருக்க வேண்டும் - பிரதமர் நரேந்திர மோடி