டெல்லி: அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை தோற்கடிப்பதற்காக காங்கிரஸ் கட்சி தேசிய அளவில் மதச்சார்பற்ற கட்சிகளை ஒன்றிணைத்துள்ளது. பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் பணியில் ஈடுபட்டார். அதன்படி, காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், ஆம்ஆத்மி, ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட 26 எதிர்க்கட்சிகள் பாஜகவுக்கு எதிராக ஒன்றிணைந்துள்ளன. இந்த எதிர்க்கட்சிகள் மக்களவைத் தேர்தலில் இணைந்து செயல்படுவது தொடர்பாகவும், தேர்தல் வியூகம் தொடர்பாகவும் பல்வேறு கட்டங்களாக ஆலோசனை மேற்கொண்டன.
முதற்கட்டமாக பீகார் மாநிலம் பாட்னாவில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து இரண்டாம் கட்டமாக பெங்களூரில் கடந்த ஜூலை 17, 18 ஆகிய தேதிகளில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. காங்கிரஸ் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், 26 எதிர்க்கட்சிகள் அடங்கிய இக்கூட்டணிக்கு 'இந்தியா' என்று பெயர் வைக்கப்பட்டது. அதன் பிறகு இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள் அனைத்தும் தேர்தலைக் கருத்தில் கொண்டு ஒன்றிணைந்து செயல்பட்டு வருகின்றன.
இந்த சூழலில், இந்தியா கூட்டணியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் மற்றும் பிற ஒருங்கிணைப்பாளர்களை தேர்வு செய்யும் பணிகள் நடந்து வருவதாக தெரிகிறது. இதில், எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் பணியில் ஈடுபட்ட நிதிஷ்குமார் தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது. அதேபோல், நிதிஷ்குமார் இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படக்கூடும் என்றும் பேசப்பட்டது. ஆனால், தனக்கு எந்தவித பதவி ஆசையும் இல்லை என நிதிஷ்குமார் தெரிவித்தார். அதேநேரம், நிதிஷ்குமார் பிரதமர் பதவிக்கு தகுதியானவர் என மக்கள் கருதுவதாக பீகார் அமைச்சர் ஷ்ரவன் குமார் கூறியதை சுட்டிக்காட்டிய பாஜகவினர், நிதிஷ்குமாருக்கு பிரதமராக ஆசை இருப்பதாக விமர்சித்தனர்.
இதற்கு மத்தியில் நாளை(ஆகஸ்ட் 31) மும்பையில் இந்தியா கூட்டணியின் மூன்றாவது ஆலோசனைக்கூட்டம் நடக்கவுள்ளது. இதில், 28 கட்சிகளைச் சேர்ந்த 60-க்கும் மேற்பட்ட தலைவர்கள் பங்கேற்கவுள்ளதாக தெரிகிறது. இக்கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், ஆம்ஆத்மி தலைவரும் டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக இருக்க வேண்டும் என தான் விரும்புவதாக ஆம்ஆத்மி செய்தித் தொடர்பாளர் பிரியங்கா கக்கர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனியார் செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்த பிரியங்கா கக்கர், "அரவிந்த் கெஜ்ரிவால் எதிர்க்கட்சி கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். கெஜ்ரிவால் பொதுமக்களின் பிரச்சினைகளை முன்னிலைப்படுத்தி செயல்பட்டு வருகிறார். பிரதமர் மோடிக்கு சவாலாக உருவெடுத்துள்ளார். பல்வேறு பிரச்சினைகளில் பிரதமருக்கு எதிராக துணிச்சலாக கருத்து தெரிவித்து வருகிறார்" என்று கூறினார்.