புதுச்சேரி: வரும் 24 ஆம் தேதி அமைச்சர்கள் பதவியேற்பு விழா நடைபெறும் என, தகவல்கள் வெளியாகியுள்ளன.
புதுச்சேரி பாஜக கூட்டணியில், என்.ஆர்.காங்கிரஸ் கட்சித் தலைவர் ரங்கசாமி முதலமைச்சராகப் பதவியேற்று, ஐம்பது நாள்கள் கடந்த நிலையில், நீண்ட இழுபறிக்குப் பின் கடந்த வாரம் புதுச்சேரி மாநில சட்டப்பேரவையின் புதிய சபாநாயகராக, பாஜக.,வின் சட்டப்பேரவை உறுப்பினர் ஏம்பலம் செல்வம் பொறுப்பு ஏற்றுக்கொன்டார்.
இருப்பினும் அமைச்சர்கள் பதவியேற்பு இதுவரை நடைபெறவில்லை. என்.ஆர்., காங்கிரஸ் தேனி ஜெயக்குமார், லட்சுமி நாராயணன் ஆகியோர் அமைச்சர் பதவி உறுதியாகிவிட்டது.
ஆனால், ஆதிதிராவிடர் அமைச்சர் யார் என்பதில், அக்கட்சியில் குழப்பம் நீடித்து வருகிறது. இந்த நிலையில், பாஜக சார்பில் நமச்சிவாயம், ஜான் குமார் ஆகியோர் அமைச்சர்களாகத் தேர்வு செய்யப்பட்ட பட்டியல் ரங்கசாமியடம் அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பட்டியல் மாற்றம் போட்டி
ஆனால், இப்பட்டியலை நிறுத்தி வைக்கும்படி, பாஜக தெரிவித்துள்ளது. காமராஜ நகர் ,நெல்லித்தோப்பு தொகுதி ஆகிய இரு தொகுதிகளிலும், தனது செல்வாக்கால் தந்தை, மகன் இரண்டு எம்எல்ஏக்களுடன் இருக்கும் ஜான்குமாரை அமைச்சர் பட்டியலில் இருந்து நீக்கிவிட்டு, மற்றொருவர் பெயரை அந்தக் கட்சியில் சிலர் சேர்க்க முயற்சி செய்வதாகவும், ஊசுடு தனித் தொகுதி எம்எல்ஏவான சாய்குமார், நீண்ட நாட்களாகக் கட்சியிலுள்ள தனக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டுமெனவும் வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது.
இதன் காரணமாக அமைச்சர் பட்டியலில் மாற்றம் செய்யப்பட்டு, சாய் சரவணகுமாருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதில் அதிர்ச்சி அடைந்த பாஜக எம்எல்ஏ ஜான்குமார், தனது மகன் வில்லியம் ரீச்சர்ட், சட்டப்பேரவை உறுப்பினர் கல்யாணசுந்தரம் ஆகியோருடன் டெல்லியில் மூன்று நாட்களாக முகாமிட்டுள்ளார்.
மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியைச் சந்தித்து வெற்றி பெற்ற ஆறு பேரில் மூன்று எம்எல்ஏக்கள் ஆதரவு, தனக்கு உள்ளதால் அமைச்சர் பதவி தர வேண்டும் என வலியுறுத்தி வருகிறார். கட்சித் தலைவர் உட்பட மேலிடத் தலைவர்களை சந்திக்கவும் அனுமதிகோரி டெல்லியில் காத்திருக்கிறார்.
ஜூன் 24 இல் பதவியேற்பு?
இதன் காரணமாக, இன்று(ஜூன்.21) புதிய அமைச்சரவை பதவியேற்பு நடைபெறும் என கூறப்பட்டு வந்த நிலையில், அமைச்சரவைப் பட்டியல் இறுதி செய்யப்படவில்லை.
பாஜகவில் அமைச்சர்கள் பட்டியலில் ஏற்பட்டுள்ள மாற்றத்தால், என்ஆர் காங்கிரஸ் அமைச்சர்கள் பட்டியலிலும் மாற்றம் இருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இரண்டு பட்டியலினத்தவர்களுக்கு அமைச்சர் பதவி வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால், பட்டியலினத்தவரான சாய் சரவணக்குமாருக்கு பாஜகவில் அமைச்சர் பதவி தரப்படும் நிலையில், என் ஆர் காங்கிரஸ் தரப்பில் பட்டியலினத்தவரான அமைச்சர் பட்டியலில் தனிதொகுதியில் வெற்றி பெற்ற ராஜவேல் பெயர் இடம்பெற்றது.
எனவே அவருக்கு துணை சபாநாயகர் பதவி தரப்பட்டு, காரைக்கால் பகுதி திருமுருகனுக்கு அமைச்சரவையில் இடம் அளிக்கலாம் எனத் தெரிகிறது. என்ஆர் காங்கிரஸ், பாஜக ஆகிய இரு கட்சிகளும் அமைச்சர்களின் பெயர்களை இலாக்களுடன் இன்று இறுதி செய்து, அவற்றை துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனிடம் ரங்கசாமி வழங்குவார் என தெரிகிறது
உடனடியாக, இப்பட்டியல் குடியரசு தலைவருக்கு அனுப்பப்பட்டு, ஒப்புதல் பெறப்படும். அதன்பிறகு அமைச்சர்களுக்குப் பதவியேபார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது
இதுகுறித்து என்ஆர் காங்கிரஸ் கட்சித் தரப்பில்,"புதுச்சேரியில் அமைச்சரவை விரிவாக்கம் விரைவில் நடைபெறும். அமைச்சர்களின் பட்டியலை இறுதி செய்வது தொடர்பான ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது என, அக்கட்சியின் முக்கியப் பிரமுகர் ஒருவர் தெரிவித்தார்.
அதேபோன்று ஓரிரு நாட்களில் அமைச்சரவை பதவியேற்பு நடைபெறுவது உறுதி என்று இரு கட்சிகள் தரப்பிலும் தெரிவிக்கின்றனர்.
பதவிகள் கேட்டு நெருக்கடி கொடுத்த பாஜகவிற்கு, அவர்கள் கட்சியினரைக் கொண்டே முதலமைச்சர் ரங்கசாமி, 'செக்' வைத்துள்ளார். அரசியல் சதுரங்கத்தில் சாதுரியமாகக் காய்களை நகர்த்துவதில் வல்லவரான ரங்கசாமி, தற்போது பாஜகவிலும் ஆட்டத்தை ஆரம்பித்து வைத்துவிட்டு, மெளனமாக வேடிக்கை பார்த்து வருகிறார் என்றே அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
இந்த நிலையில், வரும் 24 ஆம் தேதி அமைச்சரவை பதவி ஏற்கும் என, அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அன்றும் பதவி ஏற்கவில்லை எனில் தேசிய ஜனநாயகக் கூட்டணி கேலிக்கூத்தாகி வருவதாக விமர்சனம் எழும் என்பதில் ஐயமில்லை.