பலன்பூர் (குஜராத்): குஜராத் மாநிலம் பலன்பூர் தாலுகாவில் உள்ளது குஷாகல் கிராமம். இக்கிராம மக்கள் நெடுங்காலமாக தெருநாய்களுக்கு 10 ஏக்கர் நிலத்தை ஒதுக்கி தனியான இருப்பிடம் அமைத்து கொடுத்துள்ளனர்.
இவ்வாறு கொடுக்கப்பட்ட பகுதிகளில் அரை ஏக்கர் நிலத்தின் விலை 25 லட்சம் ரூபாய் ஆகும். இந்நிலையில் நாய்களுக்கு சொந்தமான மொத்த நிலத்தின் மதிப்பு தோராயமாக 5 கோடி ரூபாய் வருகிறது. மேலும் அக்கிராம மக்கள் ஆண்டு முழுவதும் நாய்களுக்கு உணவு தயார் செய்து கொடுக்கிறார்கள்.
கிராமத்தில் கிட்டத்தட்ட 600 வீடுகள் உள்ளன. இங்கு பெரும்பான்மையான மக்கள் சவுத்ரி சமூகத்தினராக உள்ளனர். இக்கிராம மக்களின் பிரதான தொழிலாக கால்நடை வளர்ப்பு மற்றும் விவசாயம் இருந்து வருகிறது.
தங்கள் முன்னோர்களால் உருவாக்கப்பட்ட பாரம்பரியத்தைப் பின்பற்றி, தெரு நாய்களுக்காக கிராமத்தின் நடுவில் 10 ஏக்கர் நிலத்தை ஒதுக்கியுள்ளதாக தெரிவித்தனர்.
இந்த பாரம்பரியமானது பல ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவை நவாப்கள் ஆட்சி செய்த காலத்திலிருந்து பின்பற்றப்பட்டு வருகிறது. நவாப்களின் நிலத்தை கிராம மக்களுக்கு விவசாயத்திற்காக வழங்கினர். அதற்கு பதிலாக மக்கள் தெரு நாய்களுக்கு தனியாக ஒரு பகுதி நிலத்தை ஒதுக்கினர். நவாப்கள் கொடுத்த நிலம் சாகுபடிக்கு பயன்படுத்தப்பட்டது.
இந்த சாகுபடியின் மூலம் கிடைக்கும் விளைச்சல் நாய்களுக்காகவும் ஒதுக்கப்படுகிறது. கிராமங்களில் நடைபெறும் திருவிழாக்களில் நாய்களுக்கு கிராம மக்கள் ஒன்று கூடி உணவு மற்றும் இனிப்புகள் தயாரிக்கிறார்கள். இதற்கென்று தனியாக பெரிய பாத்திரங்களை வாங்கி வைத்துள்ளனர்.
இதுகுறித்து, குஷாகல் கிராமத்தை சேர்ந்த பிரகாஷ் சவுத்ரி கூறுகையில், "எங்கள் கிராமத்தில் நாய்களுக்கு சேவை செய்யும் வழக்கம், முன்னோர்கள் காலத்திலிருந்தே பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த கிராமத்தில் உள்ள 10 ஏக்கர் நிலத்தில் என்ன லாபம் கிடைத்தாலும், நாய்களை வளர்க்க பயன்படுத்தப்படுகிறது.
இன்று முழு கிராமமும் ஒன்றுபட்டு இந்த நாய்களுக்கு சேவை செய்கின்றன. மற்றுமொரு கிராமவாசியான ஹிதேஷ் சவுத்ரி கூறுகையில், "எங்கள் கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட சவுத்ரி சமுதாய மக்கள் வாழும் வீடுகள் உள்ளன. இன்றும் இந்த சவுத்ரி சமூக மக்களின் குடும்பங்கள் அனைத்தும் தெருநாய்களுக்கு சேவை செய்யும் பாரம்பரியத்தை பின்பற்றி வருகின்றனர்.
மேலும் நாய்களுக்காக தினமும் 10 கிலோ மாவில் கெட்டியான ரொட்டி தயாரிக்கப்படுகிறது. அனைத்து இடங்களிலும் தெரு நாய்களைக் கண்டாலே விரட்டும் சூழ்நிலையில் குஷாகல் கிராமத்தினர் இதனை சேவையாகவும், பாரம்பரியமாகவும் செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க:அயோத்தி தீப உத்சவ்வில் லட்சக்கணக்கான தீபம் ஏற்றி கின்னஸ் சாதனைக்கு ஏற்பாடு