புதுச்சேரி: புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவை பொதுத் தேர்தலையொட்டி பாஜக - அதிமுக கூட்டணியில் என்.ஆர். காங்கிரஸ் இணைவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. இதில் இழுபறி நீடித்து வந்த நிலையில் நேற்று (மார்ச் 9) என்.ஆர்.காங்கிரஸ் பாஜக கூட்டணியில் இணைந்தது.
இதைதொடர்ந்து பாஜக மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா, என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி, அதிமுக அன்பழகன் ஆகியோர் நேற்று கூட்டாக தனியார் ஓட்டலில் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய அவர்கள், அகில இந்திய என்.ஆர். காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் ஆகியவற்றுக்கு இடையிலான ஒப்பந்தத்தில் புதுச்சேரியில் மொத்த உள்ள 30 சட்டப்பேரவைத் தொகுதிகளில், அகில இந்திய என்.ஆர்.காங்கிரஸ் 16 தொகுதிகளிலும், பாரதிய ஜனதா கட்சி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் மீதமுள்ள 14 தொகுதிகளிலும் போட்டியிடுவது என ஒப்புக்கொண்டுள்ளோம் என்றனர்.
இதில் கூட்டணி கட்சியான பாமகவிற்கு ஒரு தொகுதி கூட ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த பாமக, புதுச்சேரியில் தனித்து போட்டியிட உள்ளதாக திடீரென அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், “புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக இரண்டாவது பெரிய கட்சியாக உள்ளது.
ஆனால் பாமகவிற்கு உரிய பிரதிநிதித்துவம், உரிய அங்கீகாரம் இல்லாத காரணத்தால் புதுவையில் 12 தொகுதிகளிலும் காரைக்காலில் 3 தொகுதியிலும் தனித்து போட்டியிடுவது என பாமக செயற்குழுவில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம்” என கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை திருப்தி - நாராயணசாமி