ஹைதராபாத் (தெலங்கானா): ஹைதராபாத் மாநகராட்சியின் முதல் பெண் மேயராக ராணி குமுதினி தேவி தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் 1911ஆம் ஆண்டு ஜனவரி 23ஆம் தேதியன்று வாரங்கல் மாவட்டத்தில் வதேபள்ளி கிராமத்தில் பிறந்தார். அவர் ஹைதராபாத்தின் முன்னாள் துணை பிரதமர் பிங்கிள் வெனக்தரமண ரெட்டியின் மகள். வனபர்த்தி அரச குடும்பத்தைச் சேர்ந்த இவர், ஹைதராபாத் மாநகராட்சியில் சுகாதாரக் குழுவின் தலைவராகப் பணியாற்றினார். பின்னர், 1962ஆம் ஆண்டில் முதல் பெண் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து 1962 முதல் 1964ஆம் ஆண்டு வரை மேயராகப் பணியாற்றினார். அதைத் தொடர்ந்து 1972ஆம் ஆண்டில் வனபர்த்தி தொகுதியில் சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஹைதராபாத்தின் 2ஆவது பெண் மேயர்
ஹைதராபாத்தில் இரண்டாவது பெண் மேயராக சரோஜினி புல்லாரெட்டி தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் 1965ஆம் ஆண்டில் காங்கிரசிலிருந்து ஹைதராபாத் மாநகராட்சி கவுன்சிலராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு பின்னர் நகர மேயரானார். அவர் 1965 முதல் 1969ஆம் ஆண்டு வரை மேயராகப் பணியாற்றினார். 1975ஆம் ஆண்டில் ஹைதராபாத் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தின் முதல் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மேலும், மாலக்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதியிலிருந்து இரண்டு முறை எம்எல்ஏவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். முதல் பெண் பிரதமரான இந்திரா காந்தியுடன் நல்ல நட்புறவைக் கொண்டிருந்த சரோஜினி புல்லாரெட்டி 2001ஆம் ஆண்டில் காங்கிரஸ் செயற்குழு உறுப்பினராகப் பணியாற்றினார்.
ஹைதராபாத் மாநகராட்சியின் முதல் பெண் மேயர்
2007ஆம் ஆண்டில் பெருநகர ஹைதராபாத் மாநகராட்சி உருவாக்கப்பட்டது. அப்போது, பண்டா கார்த்திகா ரெட்டி மேயர் பதவிக்கான முதல் பெண் வேட்பாளராக இருந்தார். 2009ஆம் ஆண்டில் முதல்முறையாக பெருநகர ஹைதராபாத் மாநகராட்சிக்குத் தேர்தல்கள் நடத்தப்பட்டன. வேறு எந்த வேட்பாளரும் எந்தவொரு கட்சியினராலும் பரிந்துரைக்கப்படாததால், தர்னகாவிலிருந்து முதல் முறையாக பண்டா கார்த்திகா ரெட்டி தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர், அவர் 2010ஆம் ஆண்டில் அகில இந்திய மேயர்கள் கவுன்சிலின் துணைத் தலைவராகப் பணியாற்றினார்.
முதல் முறையாக பெண் மேயர், துணை மேயர்
பெருநகர ஹைதராபாத் மாநகராட்சியின் மேயர் தேர்தலில் முதல் முறையாக, இரண்டு பெண் வேட்பாளர்கள் நகர மேயர், துணை மேயர் பதவிகளுக்குத் தேர்வுசெய்யப்பட்டுள்ளனர். தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியிலிருந்து மேயராக விஜயலட்சுமி கட்வால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பெருநகர ஹைதராபாத் மாநகராட்சியின் தேர்தலில் பஞ்சாரா ஹில்ஸ் கார்ப்பரேட்டர் பதவியை வென்ற அவர், தெலங்கானா ராஷ்டிர சமிதியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான கே. கேசவரவோவின் மகள் ஆவார். தொடர்ந்து, மோத்தே ஸ்ரீலதா ரெட்டி என்பவர் முதல் முறையாக பெருநகர ஹைதராபாத் மாநகராட்சியில் துணை மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.