டெல்லி: உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் ஒரு வாரமாக கனமழை பெய்துவருகிறது. டெல்லியில், இன்று அதிகாலை முதலே கனமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் முக்கிய நகர்ப் பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டு, பிரகதி மைதான், லஜ்பத் நகர், ஜங்புரா பகுதிகளில் போக்குவரத்துப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பல்வேறு சாலைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் காவலர்கள் வாகனங்களைத் திருப்பிவிடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
குறிப்பாக, அதிகாலை 2.30 மணி முதல் 5.30 மணி வரை தொடர்ச்சியாக கனமழை பெய்துள்ளது. அதிகபட்சமாக, சப்தர்ஜங் விமான நிலைய சுற்றுவட்டாரப் பகுதிகளில் மட்டும் 138.8 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம், டெல்லியில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மிதமானது முதல் கனமழை தொடரும். எனவே ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்படுகிறது எனத் தெரிவித்துள்ளது.
மேலும் தமிழ்நாட்டில் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக அடுத்த சில நாள்களுக்கு, சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு?