கவுகாத்தி: வங்கதேசத்திலிருந்து வந்து இந்தியாவுக்குள் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களை அடையாளம் காணும் வகையில் அஸ்ஸாம் மாநிலத்தில் தேசிய குடிமக்கள் பதிவுப் பட்டியல் தயாரித்து வெளியிடப்பட்டது. இந்தப் பணிகளுக்காக சுமார் 1,200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 55 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாநில அரசு ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.
கடந்தாண்டு ஆகஸ்ட் மாதத்தில் புதுப்பிக்கப்பட்டு வெளியிடப்பட்ட இந்தப் பட்டியலில் லட்சக்கணக்கான மக்களின் பெயர் விடுபட்டுள்ளதாகத் தொடர்ந்து புகார்கள் எழுந்தவண்ணம் இருந்தன.
இதையடுத்து, இது தொடர்பான வழக்கு கவுகாத்தி உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டது. இதையடுத்து நீதிமன்றத்தில் இந்த விவகாரம் தொடர்பாக அஸ்ஸாமின் தேசிய குடிமக்களின் பதிவுத் துறை பிரமாணப் பத்திரத்தை சமர்ப்பித்தது. அதில் அஸ்ஸாமின் தேசிய குடிமக்களின் பதிவில் சுமார் 4,795 நபர்களின் பெயர்கள் விடுபட்டிருக்கலாம் எனவும், அவர்களின் பெயர்கள் விரைவில் இணைக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
முன்னதாக அஸ்ஸாமில் 1971ஆம் ஆண்டிற்கு முன்னதாக குடியேறிய 33 மில்லியன் மக்கள் அஸ்ஸாமின் தேசிய குடிமக்களின் பதிவில் தங்களை இணைக்க விரும்பினர். ஆனால், அதில் சுமார் 1.9 மில்லியன் மக்கள் பெயர் இடம்பெறவில்லை.
இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து புதிய வரைவுப் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் சட்டவிரோதமாக குடியேறியவர்களும் இடம்பெற்றிருந்தனர். இந்தச் சம்பவங்கள் அஸ்ஸாமில் பரபரப்பை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் அரசு தவறான புள்ளிவிவரங்களைக் கையாண்டுவருவதாக குற்றம்சாட்டினர்.
இதையும் படிங்க: பிகார் தேர்தல்: சிஏஏ குறித்து பேச்சால் என்டிஏ கூட்டணிக்குள் சலசலப்பு!