அமிர்தசரஸ் அருகே குழந்தைகளுக்கான டிபன் பாக்ஸில் மேம்படுத்தப்பட்ட ஐஇடி வெடிகுண்டை அம்மாநில காவல் துறையினர் கண்டுபிடித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து பேசிய அம்மாநில காவல் துறை தலைவர் டின்கர் குப்தா, " நேற்று மாலை, அமிர்தசரஸ் அருகே தலேக் கிராமத்தில் ஐந்து கையெறி குண்டுகள், 9mm பிஸ்டல், டிபன் பாக்ஸ் வெடிகுண்டைக் கைப்பற்றியுள்ளோம்.
அந்த கிராமத்தில் ட்ரோன் பறக்கும் சவுண்ட் கேட்பதாக கிராம தலைவர் தகவல் கொடுத்தார். உடனடியாக அப்பகுதியில் தீவிர சோதனை நடத்தினோம். ஆனால், எவ்வித ட்ரோன் நடவடிக்கையும் எங்களின் கண்களில் சிக்கவில்லை.
எனவே, ட்ரோன் எல்லை தாண்டி வந்து,பார்சலை டெலிவரி செய்துவிட்டு மீண்டும் திரும்பி சென்றது உறுதியானது. அப்போது தான், கிராமத்தில் சந்தேகத்திற்கிடமான வகையில் பை ஒன்று கிடப்பதாகத் தகவல் கிடைத்தது.
அதனை சோதனை செய்து பார்த்த போது, மேம்படுத்தப்பட்ட ஐஇடி வெடிகுண்டு பொருத்தப்பட்ட டிபன் பாக்ஸ் கைப்பற்றப்பட்டது. அதனை, ரிமோட் மூலம் வெடிக்க வைக்கும் வகையில், கச்சிதமாக உருவாக்கியுள்ளனர். 2 முதல் 3 கிலோ அளவிலான ஆர்டிஎக்ஸ் அதில் பொருத்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
கண்களைக் கவரும் வகையில் தயார் செய்யப்பட்டிருக்கும் இந்த டிபன் பாக்ஸ் வெடிகுண்டு, குழந்தைகளை டார்கெட் செய்ய திட்டமிட்டிருக்கலாம் என தெரிவித்தார்.
சுதந்திர தினத்தன்று அசம்பாவித சம்பவங்களை ஏற்படுத்த பயங்கரவாதிகள் இத்தகைய செயலில் ஈடுபட்டிருக்கலாம் என தெரிகிறது.
இதையும் படிங்க: செய்தியாளர் படுகொலை...மற்றொருவர் சிறைபிடிப்பு; தலிபான்கள் அட்டூழியம்