ஹவெரி: கர்நாடகாவில் வாடிக்கையாளர்களின் பணத்தை கையாடல் செய்து ஆன்லைன் விளையாட்டுகளில் தொலைத்த ஐசிஐசிஐ வங்கி ஊழியரை போலீசார் கைது செய்தனர். ஏறத்தாழ இரண்டரை கோடி ரூபாய் பணத்தை வங்கி ஊழியர் கையாடல் செய்ததாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.
கர்நாடகா மாநிலம், ஹவெரி பகுதியைச் சேர்ந்தவர் விரேஷ் காசிமாத். ஐசிஐசிஐ வங்கியின் துணை மேலாளராகப் பணியாற்றி வந்தார். ஆன்லைன் விளையாட்டுகளில் அதீத ஆர்வம் கொண்ட விரேஷ் காசிமாத், மணிக்கணக்கான நேரத்தில் ஆன்லைனில் விளையாட்டுகளில் பொழுதை கழிப்பதையே கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது.
ஆன்லைன் விளையாட்டுகளில் செலவழிக்க பணத் தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையில், வங்கி வாடிக்கையாளர்களின் கணக்குகளில் இருந்து பணம் கையாடல் செய்வதை விரேஷ் குமார் பழக்கமாக கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்குகளில் இருந்து தனக்கு தெரிந்தவரின் கணக்கிற்கு பணத்தை பரிமாற்றம் செய்த விரேஷ் அதன் மூலம் கையாடல் செய்ததாக போலீசார் கூறினர்.
தனக்கு பரீட்சயம் ஆனவரின் வங்கிக் கணக்கிற்கு வாடிக்கையாளர்களின் பணத்தை பரிமாற்றம் செய்து அதன்பின் தனது சுய தேவைக்கு விரேஷ் பயன்படுத்திக் கொண்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் இந்த தில்லுமுல்லு வேலை நடந்து வந்த நிலையில் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளதாக போலீசார் கூறினர்.
அந்த வகையில் கடந்த 6 மாதத்தில் மட்டும் 2 கோடியே 36 லட்ச ரூபாயை விரேஷ் கையாடல் செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். அந்த வகையில் கிடைத்த பணத்தை முதலீடாக கொண்டு தொடர் ஆன்லைன் விளையாட்டுகளில் விரேஷ் செலவழித்து வந்துள்ளார். குறிப்பிட்ட கணக்கிற்கு அடிக்கடி பணப் பரிமாற்றம் ஆவதை கண்காணித்த அதிகாரிகள் இந்த கையாடலை கண்டுபிடித்து உள்ளனர்.
இதுகுறித்து ஐசிஐசிஐ வங்கி மேலாளர் அளித்த புகாரில் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர். விரேஷ் காசிமாத்தை கைது செய்த போலீசார், நீதிமன்ற காவலில் எடுத்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் விரேஷிடம் இருந்து 32 லட்ச ரூபாயை மீட்ட அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: சிபில் ஸ்கோர் குறைந்தால் இதைச் செய்யுங்க.. சூப்பர் டிப்ஸ்!