புவனேஸ்வர் : விருப்ப ஓய்வு பெற்ற மறுநாளே தமிழகத்தை சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி வி.கே. பாண்டியன், ஒடிசா கேபினட் அமைச்சர் அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்டு உள்ளார். ஒடிசா மாநில அரசின் மாற்றத்திற்கான முயற்சிகளை மேற்கொள்ளும் 5T (Transformational Initiatives) திட்டத்திற்கு தலைவராக வி.கே. பாண்டியன் நியமிக்கப்பட்டு உள்ளார்.
தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த வி. கார்த்திகேய பாண்டியன், 2000ஆம் ஆண்டு பேட்ச் ஒடிசா கேடர் ஐஏஎஸ் அதிகாரியாக தேர்ச்சி பெற்றவர். 2002ஆம் ஆண்டு ஒடிசா மாநிலத்தின் கலஹண்டி மாவட்டத்தில் உள்ள தர்மஹர்க் பகுதியின் துணை ஆட்சியராக நியமிக்கப்பட்டார். பின்னர் 2005ஆம் ஆண்டு மயூர்பஞ்ச் மாவட்டத்தின் ஆட்சியராக பணியாற்றினார்.
தொடர்ந்து 2007ஆம் ஆண்டு கஞ்சம் மாவட்டத்தின் ஆட்சியராக வி.கே. பாண்டியன் நியமிக்கப்பட்டார். ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக்கின் சொந்த மாவட்டம் கஞ்சம் என்பதால் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. தொடர்ந்து 2011ஆம் ஆண்டு முதலமைச்சர் அலுவலகத்தில் வி.கே. பாண்டியன் பணியில் சேர்ந்தார்.
2019ஆம் ஆண்டு 5வது முறையாக நவீன் பட்நாயக் முதலமைச்சராக பதவியேற்ற போது, முதலமைச்சரின் தனிச் செயலாளராக வி.கே. பாண்டியன் நியமிக்கப்பட்டார். மேலும், அரசுத் துறைகளை மேம்படுத்தும் மாற்றத்திற்கான முயற்சி என்றழைக்கப்படும் 5T (Transformational Initiatives) திட்டத்தை கூடுதலாக கவனித்து வந்தார்.
ஒடிசா அரசாங்கத்திலும், ஆளும் கட்சியான பிஜு ஜனதா தள நிர்வாகிகள் மத்தியிலும் நவீன் பட்நாயக்குக்கு அடுத்த இடத்தில் மிகவும் செல்வாக்கு மிகுந்த நபராக வி.கே. பாண்டியன் வலம் வரத் தொடங்கினார். இந்நிலையில், கடந்த அக்டோபர் 20ஆம் தேதி வி.கே. பாண்டியன் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்து இருந்த, நேற்று (அக். 23) மத்திய அரசு அதற்கு ஒப்புதல் அளித்தது.
இதையடுத்து, ஒடிசா மாநில அரசின் கேபினட் அமைச்சர் அந்தஸ்திற்கு வி.கே. பாண்டியன் உயர்த்தப்பட்டு உள்ளார். மேலும் மாநிலத்தின் 5T (Transformational Initiatives) திட்டத்திற்கு தலைவராக விகே. பாண்டியன் நியமிக்கப்பட்டு உள்ளார். இதன் மூலம் ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக்கின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் இனி வி.கே. பாண்டியன் பணியாற்றுவார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க : காங்கோ படகு விபத்தில் இதுவரை 16 பேர் உயிரிழப்பு!