மத்தியப்பிரதேச மாநிலம், போபாலைச் சேர்ந்த, டீனா டாபி கடந்த 2015ஆம் ஆண்டு ஐஏஎஸ் தேர்வில் அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்தார். ஐஏஎஸ் தேர்வில் அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்த முதல் பட்டியலின பெண் என்ற பெருமைக்குரியவர். இவர் அதே ஆண்டு ஐஏஎஸ் தேர்வில் இரண்டாம் இடம் பிடித்த, ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த அதார் அமீர்கானை திருமணம் செய்து கொண்டார். ஐஏஎஸ் பயிற்சியின்போது, இருவரும் காதலித்து, கடந்த 2018ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.
இவர்களது திருமணம் இணையத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. டீனா டாபி பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பதாலும், இந்து-முஸ்லீம் காதல் திருமணம் என்பதாலும், இவர்களது திருமணம் மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக அமையும் என அனைவரும் பாராட்டினர். அதேநேரம் இந்துத்துவாவாதிகள் தரப்பில் எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டது. இணையத்தை கலக்கிய இந்த காதல் ஜோடி, கடந்த 2021ஆம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக விவாகரத்து செய்து கொண்டனர்.
டீனா டாபி தற்போது ராஜஸ்தான் மாநிலத்தில் நிதித்துறை இணை இயக்குநராகப் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் பணிபுரியும் சக ஐஏஎஸ் அதிகாரியான பிரதீப் கவாண்டேவை மறுமணம் செய்ய இருப்பதாக, டீனா அறிவித்துள்ளார். திருமண நிச்சயதார்த்த புகைப்படத்தை தனது இஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள டீனா டாபி, "நீ தந்த சிரிப்பை நான் அணிந்திருக்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
இருவரும் கைகோர்த்தபடி இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள பிரதீப் கவாண்டே, "நாம் இணைந்திருப்பதே, எனது விருப்பமான இடம்" எனக் குறிப்பிட்டுள்ளார். இவர்களது திருமணம் வரும் ஏப்ரல் 22ஆம் தேதி ஜெய்ப்பூரில் நடக்கவிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இரண்டு ஐஏஎஸ் அதிகாரிகளுக்கும் இணையத்தில் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: '6 மணி நேரம் இங்குதான் இருப்பேன், முடிந்தால் கைது செய்யுங்கள்'- அண்ணாமலை சவால்