ஜோத்பூர்: உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட நான்கு இலகுரக ராணுவ ஹெலிகாப்டர்கள் இந்திய விமானப்படையில் சேர்க்கப்பட்டன. ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள விமானப்படை தளத்தில், விமானப்படைத் தளபதி வி.ஆர் சவுத்ரி உள்ளிட்டோர் முன்னிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஹெலிகாப்டர்களை நாட்டுக்காக அர்ப்பணித்தார்.
இந்த ஹெலிகாப்டர்கள் மத்திய அரசின், ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டன. 5.8 டன் எடை கொண்ட இந்த ஹெலிகாப்டர்கள், இரட்டை எஞ்சின் கொண்டவை. இந்த ஹெலிகாப்டர்கள் உயரமான மலைப்பகுதிகளில் உள்ள பதுங்கு குழிகள், ட்ரோன்கள், டாங்கிகள் உள்ளிட்டவற்றை தாக்கும் திறன் கொண்டவை.
கார்கில் போருக்குப் பிறகு மலைப்பகுதிகளில் ஹெலிகாப்டர்களின் இன்றியமையாத தேவையை அறிந்து, இந்த வகை ஹெலிகாப்டர் உருவாக்கப்பட்டதாகவும், தற்போது அந்த டிசைன் மேலும் மேம்படுத்தப்பட்டு இலகுரக ஹெலிகாப்டர்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: இந்திய வான்வெளியில் ஈரானிய விமானம்... வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு...