ஹைதராபாத்: மேற்படிப்புக்காக லண்டன் சென்ற ஹைதராபாத் இளம் பெண், வெம்ப்லியில் உள்ள நீல்ட் கிரசென்ட் என்ற இடத்தில், பிரேசில் இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தியதில் உயிரிழந்தார். தெலங்கானாவில் உள்ள ரங்காரெட்டி மாவட்டத்தில் பிராமணப்பள்ளி எனும் பகுதியைச் சேர்ந்தவர் தேஜஸ்வினி ரெட்டி (27). இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மேற்படிப்புக்காக லண்டன் சென்றார். இரண்டு மாதங்களுக்கு முன்பு படிப்பு முடிந்து கடந்த மாதம் வீடு திரும்புவதாக இருந்தது. சில காரணங்களால் அவரால் வரமுடியவில்லை.
தேஜஸ்வினி லண்டனில் தனது நண்பர்களுடன் ஆண்களும் பெண்களும் ஒன்றாக தங்கும் பிளாட்டில் வசித்து வந்துள்ளார். அங்கு பிரேசில் நாட்டைச் சேர்ந்த இளைஞர் ஒருவரும் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் தேஜஸ்வினி, பிரேசில் இளைஞரால் திடீரென கத்தியால் தாக்கப்பட்டார். இந்த தாக்குதலில் ஈடுபட்ட பிரேசில் இளைஞரை போலீசார் கைது செய்து உள்ளனர். இதனிடையே, உயிரிழந்த பெண்ணின் பெற்றோர், தங்கள் மகளின் உடலை விரைவில் இந்தியா கொண்டு வருமாறு மாநில அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். கொலைக்கான காரணத்தை போலீசார் இன்னும் கண்டறியவில்லை.
மேலும், இறந்த பெண்ணின் அடையாளத்தை லண்டன் காவல்துறை இன்னும் வெளியிடவில்லை. உடற்கூராய்வு முடிந்த பின்னர் இறந்த பெண்ணின் அடையாளத்தை போலீசார் முறையாக வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. செவ்வாய்க் கிழமை (ஜூன் 13) காலை நடந்த இந்த சம்பத்தில் தேஜஸ்வினி கத்தியால் குத்தப்பட்டார். இந்த தாக்குதலைத் தடுக்க முயன்ற அவரது தோழியும் தாக்கப்பட்டு உள்ளார்.
இந்த தாக்குதலுக்குப் பின்னர் பிரேசில் நாட்டவரான கெவன் அன்டோனியோ லோரென்கோ டி மொரைசை கைது செய்வதற்காக அவரது படத்தை போலீசார் வெளியிட்டு பொதுமக்களின் உதவியை நாடி இருந்தனர். பின்னர் கெவன் கைது செய்யப்பட்டார். 23 வயதான இவர் வெம்ப்லியில் உள்ள நீல்ட் கிரசென்ட்டின் குற்றம் நடந்த இடத்திற்கு அருகிலுள்ள ஹாரோவில் இருந்து கைது செய்யப்பட்டார்.
இந்த தாக்குதலில் காயம் அடைந்த இரண்டு பெண்களுக்கும் மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். இருப்பினும் தேஜஸ்வினி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் காயம் அடைந்த, பெயர் வெளியிடப்படாத 28 வயதான மற்றொரு பெண் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும் பெரிதாக ஆபத்து இல்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.