பாகிஸ்தான் போர் நிறுத்த ஒப்பந்தங்களை மீறி, பயங்கரவாத ஊடுருவல், அத்துமீறி தாக்குதல் உள்ளிட்ட செயல்களில் அவ்வப்போது ஈடுபட்டுவருகிறது. இந்தியாவிற்குள் ஆயுதங்களையும் கடத்தி வரும் முயற்சியும் நடந்துவருகிறது..
அந்த வகையில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு மற்றும் காஷ்மீர் பகுதியிலிருந்து ஆயுதங்களை கடத்தும் பாகிஸ்தான் முயற்சியை இந்திய ராணுவம் மீண்டும் தடுத்து நிறுத்தியுள்ளது. ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாகக் காவல் துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இத்தகவலின்பேரில், கஸ்பா கிராமத்தில் மாவட்ட எஸ்.எஸ்.பி டாக்டர் வினோத் குமார் மற்றும் டி.எஸ்.பி முனிஷ் சர்மா ஆகியோர் தலைமையில் அமைக்கப்பட்ட சிறப்பு செயல்பாட்டு குழுவுடன், பாதுகாப்பு படையினர் இணைந்து அதிரடி சோதனை நடத்தினர்.
மணிக்கணக்கில் நடத்தப்பட்ட இந்தச் சோதனையில் ஒரு ஏகே-56 ரக துப்பாக்கி, இரண்டு சீன துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டன. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறை அலுவலர்கள் விசாரணை நடத்திவருகின்றனர்.