டெல்லி: மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், டெல்லியின் முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாக கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் சிசோடியாவின் மனைவி சீமா உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். பின்னர் கடந்த மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதையடுத்து மருத்துவமனையில் இருந்து சீமா வீடு திரும்பினார். இந்த சூழலில் அவருக்கு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து வீட்டில் இருக்கும் மனைவியை சென்று பார்க்க, அனுமதிக்கும்படி சிசோடியா தரப்பில் உயர்நீதிமன்றத்தில் நேற்று மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி தினேஷ் குமார் சர்மா, மணீஷ் சிசோடியா அவரது மனைவியை சந்திப்பதற்காக சனிக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை அனுமதிக்க வேண்டும். இதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள திகார் சிறை கண்காணிப்பாளருக்கு உத்தரவிடப்படுவதாக தெரிவித்தார்.
உயர்நீதிமன்றத்தின் உத்தரவு அடிப்படையில், இன்று (ஜூன் 3) காலை 9 மணியளவில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன், மணீஷ் சிசோடியா அவரது வீட்டுக்கு சிறை வாகனத்தில் அழைத்து செல்லப்பட்டார். காலை 9.38 மணிக்கு சிசோடியா தனது வீட்டுக்கு சென்றடைந்தார். ஆனால் அதற்குள் அவரது மனைவியின் உடல்நிலை மோசமானதால், லோக் நாயக் ஜெய் பிரகாஷ் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் சிசோடியாவால் அவரது மனைவியை சந்திக்க முடியாத நிலை ஏற்பட்டது.
டெல்லியில் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், துணை முதலமைச்சராக இருந்த மணீஷ் சிசோடியாவை பிப்ரவரி 26ம் தேதி சிபிஐ கைது செய்தது. இந்த வழக்கில் ஜாமீன் வழங்கக் கோரி சிசோடியா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை கடந்த மே 30ம் தேதி டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதே வழக்கில், மார்ச் 9ம் தேதி மணீஷ் சிசோடியாவை அமலாக்கத்துறை கைது செய்தது. மதுபான கொள்கை முறைகேடு சம்பவத்தில், அவர் 14 செல்போன்கள் மற்றும் 43 சிம் கார்டுகளை பயன்படுத்தியதாக அமலாக்கத்துறை குற்றஞ்சாட்டியது. மேலும் அவர் லஞ்சமாக பல கோடி ரூபாயை பெற்றதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்தது.
டெல்லி மாநில அரசு சார்பில் கடந்த 2021ம் ஆண்டு புதிய மதுபானக் கொள்கை அமல்படுத்தப்பட்டது. அதன்படி, 849 தனியார் மது விற்பனை நிலையங்களுக்கு, சில்லறை மதுபான விற்பனைக்கு உரிமம் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்த நிலையில், சிலர் உயர் அதிகாரிகள் லஞ்சம் பெற்றதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து மதுபானக் கொள்கையை திரும்பப் பெறுவதாக டெல்லி அரசு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.