ஆந்திரப் பிரதேசம், கர்னூல் மாவட்டம் அடோனில் ஆணவக் கொலை நிகழ்த்தப்பட்டுள்ளது. பட்டப்பகலில் ஒரு தலித் இளைஞர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். பிசியோதெரபிஸ்டாக பனிபுரியும் ஆடம் ஸ்மித் (35) தனது பணி முடிந்து இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த இருவர், இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கினர். அக்கம்பக்கத்தினர் ஸ்மித்தை காப்பாற்ற முயன்றும் முடியவில்லை. அவர் அந்த நபர்களால் கொடூரமாக கொல்லப்பட்டார்.
நாகன்னா - சுவர்தம்மா தம்பதியின் மூன்றாம் மகன்தான் ஆடம் ஸ்மித். இவர் நந்தவ்ரம் மண்டலம் குர்ஜலா கிராமத்தைச் சேர்ந்தவர். அதே கிராமத்தைச் சேர்ந்த ஈரன்னா - லக்ஷ்மி தம்பதியின் மகள் மகேஷ்வரியை இவர் கடந்த 8 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இதை அறியாத மகேஷ்வரியின் பெற்றோர் அவருக்கு நிச்சயதார்த்த ஏற்பாடு செய்துள்ளனர். வங்கித் தேர்வு பயிற்சி வகுப்பில் சேரப்போவதாக வீட்டில் கூறிவிட்டு, நவம்பர் 12ஆம் தேதி ஸ்மித்துடன் ஹைதராபாத்தைவிட்டு வெளியேறினார் மகேஷ்வரி.
பின்னர் இருவரும் திருமணம் செய்துகொண்டு, நண்பர் வீட்டில் வசித்து வந்துள்ளனர். இதுகுறித்து அறிந்த மகேஷ்வரி குடும்பத்தார், ஸ்மித்துக்கு அலைபேசி மூலம் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
காவல் நிலையத்தில் பஞ்சாயத்து:
கொலை மிரட்டலுக்கு பயந்த ஸ்மித் - மகேஷ்வரி தம்பதி, கர்னூல் எஸ்பி ஃபக்கிரப்பாவை சந்தித்து பாதுகாப்பு கேட்டுள்ளனர். இந்த சூழலில், காவல்துறையினர் தலைமையில் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மகேஷ்வரி குடும்பத்தார் அவரை தங்களுடன் வந்துவிடும்படி வற்புறுத்தியுள்ளனர். தற்கொலை செய்துகொள்வோம் எனவும் மிரட்டியுள்ளனர். ஆனால், ஸ்மித்தை பிரிந்துவர மகேஷ்வரி மறுத்துள்ளார். இந்தத் திருமணத்தை அவமானமாகக் கருதிய மகேஷ்வரி குடும்பத்தார், அவரை இனி தங்கள் கிராமத்துப் பக்கம் வர வேண்டாம் என கூறியுள்ளனர். இதற்கு மகேஷ்வரியும், அவரது கணவரும் சம்மதம் தெரிவித்துள்ளனர்.
சாதி மனிதனை சாக்கடையாக்கும்:
இதன்பிறகு அடோனியில் உள்ள ஆர்டிசி காலனியில் இந்த காதல் ஜோடி வீடெடுத்து தங்கியுள்ளனர். காவலர்கள் முன்னிலையில் மகேஷ்வரி குடும்பத்தார் அமைதியுடன் நடந்துகொண்டதால், இனி எந்தப் பிரச்னையும் இல்லை என்ற எண்ணத்தில் இருவரும் வாழ்ந்துவந்திருக்கிறார்கள். ஆனால், சாதி வெறியர்கள் ஸ்மித்தை கொடூரமாக கொலை செய்திருக்கிறார்கள். இறந்து கிடக்கும் கணவனின் உடலை கட்டியணைத்து கண்ணீர் விடும் மகேஷ்வரியை ஆற்றுப்படுத்த ஆளில்லை. மாமனாரின் காலில் விழுந்து என்னை மன்னித்துவிடுங்கள் மாமா என கதறி அழுகிறார். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கம்போல் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.