ஜெய்ப்பூர் (ராஜஸ்தான்): தமிழ்நாட்டின் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 150 நாட்களில் ‘பாரத் ஜோடோ யாத்ரா’ எனும் பாத யாத்திரையை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி தொடங்கி நடந்து வருகிறார். அப்போது ராகுல் காந்தி அணிந்திருந்த டி-சர்ட்டின் விலை ரூ.41,257 என பாஜக தரப்பில் விமர்சிக்கப்பட்டது.
இதற்கு காங்கிரஸ் கட்சியினர் பலரும் எதிர்ப்புத்தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட், “உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மப்ளரின் விலை ரூ.80,000. பாஜகவின் தலைவர்கள் 2.5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கறுப்புக் கண்ணாடியை அணிந்துள்ளனர்.
பாரத் ஜோடோ யாத்திரைக்கு மக்களிடம் இருந்து நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால் எதிர்க்கட்சிகள் கவலை அடைந்துள்ளனர். இந்த யாத்திரையில் அவர்களுக்கு (பாஜக) என்ன பிரச்னை? அவர்களே ரூ.2.5 லட்சம் மதிப்புள்ள கறுப்பு கண்ணாடி மற்றும் ரூ.80,000 மதிப்புள்ள மப்ளரை அணிந்துகொண்டு ராகுல் காந்தியின் டி-சர்ட் பற்றி பேசுகிறார்கள். பாஜகவினர் டி-சர்ட்களில் அரசியல் செய்கிறார்கள்.
பிரதமர், உள்துறை அமைச்சர் மற்றும் பிற தலைவர்கள் தங்கள் வேலையை விட்டுவிட்டு ராகுல் காந்தியை விமர்சிக்கிறார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ரூ.41,000க்கு டீ-சர்டா..? :ராகுலின் டீ-சர்ட் விலை குறித்து விமர்சித்த பாஜக!