பெங்களூரு : கர்நாடக ஆளுநர் மாளிகைக்கு நேற்று இரவு 11.30 மணியளவில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. தேசிய புலனாய்வு அமைப்பின் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்ட மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
தீவிர சோதனையில் எதுவும் கண்டறியப்படவில்லை என்றும் வெடிகுண்டு மிரட்டல் போலி என்பது தெரியவந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இரவு நேரத்தில் தேசிய புலனாய்வு முகமை கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட மர்ம நபர் ராஜ் பவனில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்ததாக போலீசார் கூறி உள்ளனர்.
முன்னதாக, கடந்த டிசம்பர் 1ஆம் தேதி பெங்களூருவில் உள்ள 15 பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கு முன்பு, கடந்த ஆண்டு 30 பள்ளிகளுக்கு இதேபோல் மின்னஞ்சல்கள் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பள்ளிகள் தவிர்த்து நேபல், வித்யஷில்பா, பசவேஷ்வர் நகர் உள்ளிட்ட இடங்களுக்கும் மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது. அதில் மிரட்டல் விடுக்கப்பட்ட ஒரு பள்ளி கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமாரின் வீட்டிற்கு எதிரே உள்ளது. பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவத்தில் முழுமையான விசாரணை முடிவடையாத நிலையில், அடுத்தடுத்து வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்படுவது பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க : காதலுடன் ஓடிய மகள்..காதலனின் தாயாரை நிர்வாணப்படுத்தி சித்ரவதை செய்த 7 பேர் கைது - கர்நாடகாவில் நடந்த கொடூரம்