ஐதராபாத் : ஒடிசாவில் அடுத்தடுத்து மூன்று ரயில்கள் விபத்துக்குள்ளான சம்பவத்தில், 270க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் படுகாயம் அடைந்தனர். ஜூன் 2ஆம் தேதி இரவு 7 மணி அளவில் ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே சென்று கொண்டு இருந்த கோரமண்டல் விரைவு ரயில், சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானது.
மோதிய வேகத்தில் தடம் புரண்டு விழுந்த ரயில் பெட்டிகள் மீது எதிர்திசையில் வந்த பெங்களூரு - ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் மோதி விபத்துக்குள்ளானது. இதற்கு முன் 1981ஆம் ஆண்டு இதே ஜூன் 2ஆம் தேதி பீகாரில் நடந்த ரயில் விபத்தில் 800 பேர் உயிரிழந்தனர். பீகார் ரயில் விபத்து சோகம் நிகழ்ந்த அதேநாளில், மீண்டும் ஒரு ரயில் விபத்து அரங்கேறியது பெருத்த சோகத்தை ஏற்படுத்தியது.
கடந்த 1981ஆம் ஆண்டு நாட்டின் மிக மோசமான மற்றும் உலகின் இரண்டாவது பெரிய ரயில் விபத்து பீகாரில் நடந்தது. பீகார் மாநிலம் பாலகோட்டில் வீசிய சூறாவளிக் காற்றில் சிக்கிய பயணிகள் ரயில் பாக்மதி ஆற்றில் தடம் புரண்டு கவிழ்ந்தது. 9 பெட்டிகளுடன் பயணிகள் நெரிசலில் சென்ற ரயிலின் 7 பெட்டிகள் பாக்மதி ஆற்றில் தடம் புரண்டு கவிழ்ந்தது.
நாட்டையே உலுக்கிய இந்த கோர விபத்தில் ஏறத்தாழ 800 பேர் வரை உயிரிழந்ததாக கூறப்பட்டது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இந்த ரயிலில் பயணம் செய்ததாக கூறப்படுகிறது. உலகின் இரண்டாவது மிக பெரிய மற்றும் மோசமான ரயில் விபத்து என பீகார் ரயில் விபத்து கண்டறியப்பட்டது.
ஏறத்தாழ 800 பேர் உயிரிழந்த விபத்தில் மீட்பு பணிகள் நீண்ட நாட்களாக நடைபெற்றது. நீண்ட போராட்டத்திற்கு ஆற்றில் மிதந்த பயணிகளின் சடலங்கள் மீட்கப்பட்டன. பலரது உடல்கள் மீட்கப்படாமலேயே போனதாக கூறப்படுகிறது. பீகார் ரயில் விபத்திற்கு பின் ஒட்டுமொத்த நாட்டையே உலுக்கும் வகையில் ஒடிசா மூன்று ரயில்கள் மாறி உள்ளது.
மூன்று ரயில்கள் விபத்து குறித்த முதற்கட்ட அறிக்கையில், பெங்களூரு - ஹவுரா அதிவிரைவு ரயில், கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரயில் ஆகிய மூன்று ரயில்களும், பலசோர் மாவட்டத்தில் உள்ள பஹானாகா பஜார் நிலையத்தில் உள்ள மூன்று தனித்தனி பாதைகளில் விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் இரண்டு பயணிகள் ரயில்களின் 17 பெட்டிகள் தடம் புரண்டு பலத்த சேதமடைந்தன.
ரயில் விபத்தில் ஏறத்தாழ 288 பேர் உயிரிழந்ததாக முன்னர் கூறப்பட்டது. இதையடுத்து சரியான கணக்கெடுப்புக்கு பின் 275 ஆக கூறப்பட்டது. மேலும் 1,000 பேர் காயமடைந்தனர். மொத்தம் 1 ஆயிரத்து 175 பேர் பல்வேறு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இதுவரை 793 பேர் சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக கூறப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க : குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு சுரினாம் நாட்டின் உயரிய விருது!