புதுடெல்லி: ஆதிபுருஷ் (Adipurush) படத்திலுள்ள சில ஆட்சேபனைக்குரிய காட்சிகளை நீக்கக் கோரி, டெல்லி உயர் நீதிமன்றத்தில் இந்து சேனா அமைப்பு பொதுநல வழக்கு தொடர்ந்து உள்ளது.
ஆதிபுருஷ் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் ஒரே நேரத்தில் நேற்று (ஜூன் 16) வெளியானது. இதில் பிரபல நடிகர் பிரபாஸ் நடிக்க ஓம் ராவுத் இயக்கி இருந்தார். இந்த படம் ராமாயணம் கதையைத் தழுவி எடுக்கப்பட்டு இருந்தது.
பிரபாஸ் இதில் ராமராகவும், பாலிவுட் நடிகை கீர்த்தி சனோன் சீதா பாத்திரத்திலும் நடித்து இருந்தனர். ராமாயணம் கதை பல முறை படமாக்கப்பட்டு இருந்தாலும் இந்த படத்தில் கதாபாத்திரங்களுக்கு வேறு பெயர்கள் கொடுக்கப்பட்டு இருந்தது. மேலும் இந்த படம் மேஷன் கேப்சர் தொழில்நுட்பத்தில் உருவாகி இருந்ததால் ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு நிலவியது.
படத்தின் டிரைலர் வெளியான சமயம் படத்தின் VFX மோசமாக இருப்பதாக விமர்சனம் எழுந்ததால் படத்தில் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டு நேற்று வெளியானது. படத்திற்கு கலவையான விமர்சனங்களே கிடைத்த நிலையில் படம் ஒரே நாளில் 140 கோடி ரூபாய் வசூல் செய்து உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தில் ராமாயணத்தில் இருந்து கதாபாத்திரங்கள் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக கூறி டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு உள்ளது.
புராணக் காவியமான ராமாயணத்தில் இருந்து ராவணன், ராமர் மற்றும் சீதையின் கதாபாத்திரங்கள் தவறான முறையில் சித்தரிக்கப்பட்டுள்ளன என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்து சேனாவின் தேசியத் தலைவர் விஷ்ணு குப்தா, 1952 ஆம் ஆண்டு ஒளிப்பதிவுச் சட்டம், 1952 இன் பிரிவு 5A இன் படி, ஓம் ராவுத் இயக்கிய திரைப்படத்தை பொதுமக்கள் பார்ப்பதற்கு தடையில்லா சான்றிதழ் வழங்கக் கூடாது என்றும் மனு தாக்கல் செய்திருந்தார். மேலும் படத்தில் இருந்து சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்காமல், ஐஎஸ்சி சென்சார் போர்டு சான்றிதழை வழங்கவோ, திரையரங்குகளில் திரையிடவோ கூடாது என மனுவில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
மேலும், படத்தில் மதத் தலைவர்கள் மற்றும் கதாபாத்திரங்களை மோசமாக சித்தரித்து இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தி உள்ளது. ராமர், சீதை, அனுமன் ஆகியோரின் உடைகள் மற்றும் உருவங்கள் முற்றிலும் வித்தியாசமான முறையில் காட்சிப்படுத்தப்பட்டு மத உணர்வுகளை புண்படுத்துவதாக உள்ளது எனவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்து சேனாவின் தேசியத் தலைவர் விஷ்ணு குப்தா தாக்கல் செய்து உள்ள இந்த மனுவில் படத்தின் இயக்குனர் ஓம் ராவுத், மத்திய அரசு, சென்சார் போர்டு, தமிழ்நாடு அரசு, தயாரிப்பு நிறுவனமான டி சீரீஸ் ஆகியோர்களை பிரதிவாதிகளாக இணைத்து குறிப்பிட்டு உள்ளார்.
இதையும் படிங்க: உலகளவில் 140 கோடி வசூல், எதிர்மறை விமர்சனங்களுக்கு மத்தியில் ‘ஆதிபுருஷ்’ செய்த சாதனை