ஷிம்லா: ஹிமாச்சலப் பிரதேசத்தில் சாம்பா மாவட்டத்தைச் சேர்ந்த சங்கா ராம் என்பவர், சைபர் மோசடியில் பணத்தை இழந்துவிட்டதாக ஷிம்லா சைபர் குற்றப்பிரிவில் புகார் அளித்துள்ளார். அதன்படி, கடந்த செப்டம்பர் மாதம் அவருக்கு இரண்டரை கோடி ரூபாய் லாட்டரி அடித்துள்ளதாக செல்போனில் அழைப்பு வந்துள்ளது.
வெற்றிபெற்ற இரண்டரை கோடியை பெற வேண்டுமென்றால், குறிப்பிட்ட தொகையை செலுத்த வேண்டும் எனக்கூறி பணம் கேட்டுள்ளனர். இரண்டரை கோடி ரூபாய் கிடைக்கப்போகிறது என்ற ஆசையில், சங்கா ராம் அவர்கள் கூறிய வங்கிக்கணக்கில் பணத்தை செலுத்தினார்.
அதன் பிறகு அவர்கள் பல்வேறு காரணங்களைக் கூறி பல முறை பணம் கேட்டுள்ளனர். அதை நம்பிய சங்கா ராம் கடந்த மூன்று மாதங்களில் பல முறை பணம் கொடுத்துள்ளார். சுமார் 200முறை பணம் அனுப்பிய பிறகே தான் ஏமாற்றப்பட்டதை சங்கா ராம் உணர்ந்துள்ளார்.
இந்த சைபர் மோசடியில் சுமார் 72 லட்சம் ரூபாயை இழந்துவிட்டதாக புகாரில் சங்கா ராம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சாம்பா போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் ஷிம்லா சைபர் குற்றப்பிரிவில் புகார் அளித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
சங்கா ராம் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த ஷிம்லா சைபர் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுபோன்ற சைபர் மோசடிகளில் சிக்காமல் மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும் போலீசார் அறிவுறுத்தினர்.
இதையும் படிங்க: ‘துணிவு’ படத்தைப் பார்த்து வங்கி கொள்ளை முயற்சி - 19 வயது இளைஞர் கைது!