இந்தியா, பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே அத்துமீறல் சம்பவம் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. அமைதியை நிலைநாட்டும் வகையில் 2003ஆம் ஆண்டு போர்நிறுத்த ஒப்பந்தம் போடப்பட்டது. இருப்பினும், இந்தாண்டு 18 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, ஜம்மு காஷ்மீர் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் 5,100 முறை அத்துமீறலில் ஈடுபட்டுள்ளதாக பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.
பயனற்றதாக மாறிய 2003 ஒப்பந்தம்
பாகிஸ்தானியர்களின் அத்துமீறலால் 36 பேர் உயிரிழந்தனர். 130க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இதுகுறித்து மூத்த காவல் துறை அலுவலர் ஒருவர் கூறுகையில், "பாகிஸ்தான் படைகள் மேற்கொள்ளும் மிக தீவிர தாக்குதல் சம்பவங்களால் 2003ஆம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தம் பயனற்றதாக மாறிவிட்டது.
இந்தியா, பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் உள்ள கிராமங்களிலும் சர்வதேச எல்லையிலும் பாகிஸ்தான் படைகள் தொடர்ந்து தாக்குதல் மேற்கொள்வதன் மூலம் மக்களிடையே அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது. எல்லையில் அமைதி குலைக்கப்படுகிறது.
காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கத்திற்கு பிறகு அதிகரித்த தாக்குதல்கள்
இந்தாண்டு மட்டும் பாகிஸ்தான் படைகள் 5,100 முறை அத்துமீறலில் ஈடுபட்டுள்ளது. சராசரியாக ஒரு நாளைக்கு 14 முறை அத்துமீறியுள்ளது. 24 பாதுகாப்பு படை வீரர்கள் உள்பட 36 மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். கடந்தாண்டு, 3,289 முறை அத்துமீறல் சம்பவங்கள் நிகழ்ந்தன. அதில், சிறப்பு அந்தஸ்து நீக்கத்திற்கு பிறகான காலகட்டத்தில் மட்டும் 1,565 அத்துமீறல் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன" என்றார்.