வாராங்கல்: கோடை காலம் தொடங்க உள்ள நிலையில், நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் வெயில் சுட்டெரிக்க துவங்கியுள்ளது. இதனால் பெரும்பாலானோர் குளிர்பானங்களை நாடி வருகின்றனர். அதே நேரம், இளைஞர்களின் கவனம், கூலிங் பீரை நோக்கி நகர்ந்துள்ளது. கோடை காலங்களில் பீர் குடித்தால், உடல் சூடு தணியும் என்பது மதுப்பிரியர்களின் நம்பிக்கை.
இந்நிலையில், கிங் ஃபிஷர் பீர் கிடைப்பதில்லை என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நூதனப் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தெலங்கானா மாநிலம், ஜகிடைலா மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் நேற்று (பிப்.26) மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. ஏராளமானோர் தங்கள் கோரிக்கை மனுக்களை கூடுதல் ஆட்சியர் லதாவிடம் வழங்கினார்.
அப்போது, பீராம் ராஜேஷ் என்பவர் கோரிக்கை மனுவை அளித்தார். அந்த மனுவில், "ஜகிடைலா பகுதியில் கிங் ஃபிஷர் பீர் கிடைப்பதில்லை. மதுபானக் கடைகளில் கிங் ஃபிஷர் நிறுவன பீர் விற்பனை செய்யப்படுவதில்லை. கொருட்லா, தர்மாபுரி உள்ளிட்ட இடங்களில், பீர் விற்பனை செய்யப்பட்டாலும், தங்கள் பகுதியில் கிடைப்பதில்லை. சட்டவிரோத மதுக்கடைகளில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. கிங்ஃபிஷர் பீர் தடையின்றி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்" என வலியுறுத்தியிருந்தார்.
இதுதொடர்பாக கலால் துறை உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க: செல்போன் வெடித்து விவசாயி உயிரிழப்பு - அதிர்ச்சி சம்பவம்!