ஆலப்புழா: பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன், பிளஸ் டூவில் 92 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருந்தும், படிப்பைத்தொடர முடியாத ஏழை மாணவி ஒருவரின் கல்விச்செலவை ஏற்க முன் வந்துள்ளார். மாணவி குறித்து அல்லு அர்ஜூனிடம் ஆலப்புழா மாவட்ட ஆட்சியர் கிருஷ்ண தேஜா கூறியதையடுத்து, அல்லு அர்ஜூன் மாணவிக்கு உதவுவதாக தெரிவித்தார்.
ஆலப்புழாவில் செயல்பட்டுவரும் 'வி ஃபார் ஆலப்பி'(We for Alleppey) திட்டத்தின் ஒரு பகுதியாக மாணவிக்கான நர்சிங் படிப்புக்கான அனைத்து செலவையும் அல்லு அர்ஜூன் ஏற்க ஒப்புக்கொண்டுள்ளார். முன்னதாக மாணவி மற்றும் அவரது குடும்பத்தினர் சில நாட்களுக்கு முன்பு கல்வியைத் தொடர போதிய பொருளாதார வசதி இல்லாததால் உதவி கேட்டு மாவட்ட ஆட்சியர் கிருஷ்ண தேஜாவிடம் கோரிக்கை விடுத்தனர். அப்போது கலெக்டர் குறுக்கிட்டு நர்சிங் படிப்பில் சேர்க்கை பெற்றார். பின்னர் கிருஷ்ண தேஜா அல்லு அர்ஜூனைத் தொடர்பு கொண்டு, நான்கு வருட படிப்புக்கான படிப்புக் கட்டணம் மற்றும் விடுதிக் கட்டணத்தைச் செலுத்துமாறு கேட்டுக் கொண்டதையடுத்து அம்மாணவிக்கு கட்டணத்தைச் செலுத்த சம்மதித்துள்ளார்,அல்லு அர்ஜூன்.
இது குறித்து கிருஷ்ண தேஜா அவரது முகநூல் பதிவில், "சில நாட்களுக்கு முன்பு, ஆலப்புழாவைச் சேர்ந்த மாணவி ஒருவர் கவலையுடன் என்னைச் சந்திக்க வந்தார். பிளஸ் டூவில் 92 சதவீத மதிப்பெண்கள் எடுத்திருந்த நிலையில், அவரது தந்தை இறந்துவிட்டதால் படிப்பைத்தொடர பணமில்லாமல் இருப்பதாகக் கூறினார்.
அந்த மாணவியின் கண்களில் இருந்த நம்பிக்கையை என்னால் உணர முடிந்தது. மேலும் 'வி ஃபார் ஆலப்பி' திட்டத்தில் அவளுக்கு உதவ முடிவு செய்தேன். நர்ஸிங் மெரிட் சீட்களுக்கு விண்ணப்பிப்பதற்கான நேரம் ஏற்கெனவே முடிந்துவிட்டதால் குறைந்தபட்சம் நிர்வாக ஒதுக்கீட்டின்கீழ் அவளுக்கு கல்லூரி இடத்தை உறுதி செய்ய வேண்டும் என்ற நெருக்கடி ஏற்பட்டது.
இதன் தொடர்பாக பல கல்லூரிகளைத்தொடர்பு கொண்டு இறுதியாக கட்டானம் செயின்ட் தாமஸ் நர்சிங் கல்லூரியில் இடம் கிடைத்தது. மாணவியின் நான்கு வருட படிப்புக்கு நிதியளிப்பதற்காக ஒரு ஸ்பான்சர் தேவைப்பட்டார். அதற்காக நான் பிரபல நடிகர் அல்லு அர்ஜூனைத் தொடர்பு கொண்டேன், அவர் ஒரு வருடத்திற்கு மட்டுமல்ல, நான்கு வருடங்களுக்கும் செலவை ஏற்க ஒப்புக்கொண்டார். நான் நேரில் சென்று அந்த மாணவியை கல்லூரியில் சேர்த்தேன்” எனக் தெரிவித்திருந்தார்.
இதையும் படிங்க:மறக்கமுடியாத வரவேற்பு அளித்த "டைனமிக் சிட்டி" தொண்டர்களுக்கு நன்றி... பிரதமர் மோடி நெகிழ்ச்சி...