கேதார்நாத் (உத்தரகாண்ட்): கேதர்நாத்தில் இருந்து குப்தகாசிக்கு பயணிகளை ஏற்றிசென்ற தனியார் நிறுவன ஹெலிகாப்ட்டர் கருட் சட்டி (Garud Chatti) பகுதியில் பறந்துகொண்டிருந்தபோது விபத்துக்குள்ளானது. இன்று நண்பகல் 12 மணியளவில் நடந்த இந்த விபத்தில் ஹெலிகாப்டர் விமானி உட்பட 7 பேர் உயிரிழந்தனர்.
இந்த ஹெலிகாப்டரில் பயணித்த சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த சுஜாதா (56) , கலா (50), பிரேம்குமார்(63) ஆகியோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களைத் தவிர பைலட் அனில் சிங், குஜராத்தைச் சேர்ந்த கிரிதி பரத், ஊர்வி பரத், பூர்வ ராமானுஜ் ஆகியோரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஜனாதிபதி திரவுபதி முர்மு ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்தார்.
ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது குறித்து விரிவான விசாரணைக்கு சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. கேதார்நாத் அருகே சென்று கொண்டிருந்தபோது பாடா என்ற இடத்தில் ஹெலிகாப்டர் திடீரென கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியது. இதில், ஹெலிகாப்டரில் பயணித்த 6 பேரும் உயிரிழந்ததாக உத்தரகாண்ட் முதலமைச்சரின் சிறப்பு முதன்மை செயலாளர் அபினவ் குமார் அறிவித்தார்.
ஆர்யன் ஏவிடேசன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துக்க சொந்தமான Bell - 407 VT-RPN ஹெலிகாப்டர் கேதார்நாத்தில் இருந்து குப்தகாசிக்கு பயணிகளை ஏற்றி வந்தது. இந்தக் ஹெலிகாப்டர் இந்திய-திபெத் எல்லை பகுதியான மோசமான வானிலை காரணமாக கருட் சட்டி (Garud Chatti) என்ற பகுதிக்கு நுழைந்தபோது பயங்கர சத்தத்துடன் விழுந்து தீப்பற்றி எரிந்தது.
தகவல் அறிந்தவுடன் மாநில பேரிடர் மீட்பு படையினர்(SDRF) விரைந்து மீட்பு பணிகளை துவங்கினர். கேதார்நாத் அருகே நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்து மிகவும் துயரகரமானது என தெரிவித்துள்ள சிவில் விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, விபத்து தொடர்பாக மாநில அரசுடன் தொடர்பில் இருப்பதாகவும், நிலைமையை கண்காணித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் 2 உ.பி. தொழிலாளர்கள் உயிரிழப்பு