சென்னை: நானும் ரவுடி தான் படப்பிடிப்பு காட்சிகளைப் பயன்படுத்தியதற்கு எதிராக நடிகர் தனுஷ் தொடர்ந்த வழக்கில், நடிகை நயன்தாரா மற்றும் அவரது கணவர் விக்னேஷ் சிவன் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகை நயன்தாரா தனது திருமண ஆவண படத்துக்காக, நடிகர் தனுஷின் ‘வொண்டர் பார்’ (Wunderbar) சினிமா தயாரிப்பு நிறுவனம் தயாரித்த, ‘நானும் ரவுடிதான்’ படத்தின் படப்பிடிப்பு காட்சிகளை அனுமதியின்றி பயன்படுத்தியதாகக் கூறி, 10 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என நடிகை நயன்தாராவுக்கு எதிராக தனுஷ் தரப்பில் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருந்தது.
இந்த நோட்டீசுக்கு பதிலளித்து நடிகை நயன்தாரா வெளியிட்ட அறிக்கை, தமிழ் மட்டுமல்லாமல் தென்னிந்திய திரையுலகங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. இந்த சூழ்நிலையில் நடிகை நயன்தாராவுக்கு எதிராக நடிகர் தனுஷின் ‘வொண்டர் பார்’ நிறுவனம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அந்த மனுவில், மும்பையைச் சேர்ந்த ‘நெட்பிளிக்ஸ்’ நிறுவனத்துக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய அனுமதி கோரி ‘வொண்டர்பார்’ நிறுவனம் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இதையும் படிங்க |
இந்த மனுவை விசாரித்த நீதிபதி அப்துல் குத்தூஸ், எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்டுள்ள நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோர் சென்னையில் வசிப்பதாகக் கூறி, இந்த வழக்கை தாக்கல் செய்ய ‘வொண்டர் பார்’ சினிமா தயாரிப்பு நிறுவனத்திற்கு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளார்.
மேலும், வழக்கு தொடர்பாக நடிகை நயன்தாரா - இயக்குநர் விக்னேஷ் சிவன் தம்பதி பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்