சிம்லா : இமாச்சல பிரதேசத்தில் கொட்டித் தீர்த்த கனமழை, நிலச்சரிவு பேரிடர்களால் 6 பேர் உயிரிழந்தனர். நிலச்சரிவு காரணமாக சண்டிகர் - மணாலி தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டதால் ஆயிரக்கணக்கிலான சுற்றுலா வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து காத்து நிற்கின்றன.
பருவம் தவறுவது உள்ளிட்ட காரணங்களால் வடமாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி வருகிறது. இமாச்சல பிரதேசத்தில் வரலாறு காணாத வகையில் கொட்டித் தீர்த்த கனமழை மற்றும் நிலச்சரிவால் ஆயிரக்கணக்கான மக்கள் கடும் பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர்.
சண்டிகர் - மனாலி தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட நிலச்சரிவால் சாலை மூடப்பட்ட நிலையில் ஆயிரக்கணக்கான சுற்றுலா வாகனங்கள் மேற்கொண்டு நகர முடியாமல் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றன. மேலும், சாலையில் கிடக்கும் பாறைகளை புல்டோசர் மற்றும் வெடிகுண்டுகளை கொண்டு அகற்றும் பணியில் ஈடுபட்டு உள்ளதாக நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
மேலும், இமாச்சல பிரதேசத்தில் கொட்டித் தீர்த்த கனமழை பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி ஏறத்தாழ 6 பேர் உயிரிழந்ததாகவும், 10க்கும் மேற்பட்டவர்கள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டதாகவும் பேரிடர் மேலாண்மை முதன்மைச் செயலாளர் ஒன்கர் சந்த் சர்மா தெரிவித்து உள்ளார்.
இந்த பேரிடரால் ஏறத்தாழ 303 விலங்குகள் உயிரிழந்ததாகவும், 3 கோடி ரூபாய் மதிப்பிலான பொதுச் சொத்துகள் சேதமடைந்ததாகவும் விரைவில் அதற்கான அறிக்கை வெளியிடப்படும் என அவர் தெரிவித்தார். நிலச்சரிவு பேரிடரால் 2 தேசிய நெடுஞ்சாலைகள் உள்பட ஏறத்தாழ 124 சாலைகள் சேதமடைந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நிலச்சரிவு காரணமாக சண்டிகர் - மனாலி தேசிய நெடுஞ்சாலை மூட்டப்பட்ட நிலையில், ஏறத்தாழ 12 கிலோ தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. சுற்றுலா வாகனங்கள் உள்பட ஆயிரக்கணக்கான வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு உள்ளது.
கோட்டிநல்லா, பந்தோகுலு உள்ளிட்ட பல்வேறு பகுதி சாலைகளில் விழுந்து கிடக்கும் பாறைகளை அகற்றும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளதாகவும், புல்டோசர், வெடிகுண்டுகளை கொண்டு பாறைகளை தகர்த்து போக்குவரத்து நெரிசலை சீர் செய்யும் முயற்சியில் தொடர்ந்து வருவதாகவும் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க : கோவை மாணவர் லண்டனில் உயிரிழப்பு... இறப்பில் மர்மமா? இங்கிலாந்து போலீஸ் விளக்கம்!