பெங்களூரு: கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் நேற்று(மே 1) இரவு பெய்த கன மழையால் பல சேதங்கள் உண்டாகின.பெங்களூருவின் பிரதான சாலைகளில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகினர். நகரின் முக்கிய பகுதியான ஒகாலிபுரத்தின் சிலிக்கான் பகுதியில் நீர் தேங்கியதால் மூன்று மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஃபிரசர் டவுன், சிவாஜிநகர், விஜயநகர் மற்றும் ஹோஸஹாலி ஆகிய பகுதிகளிலும் மழைநீர் பெருமளவு தேங்கியது. மேலும் 32 மின் கம்பங்கள் பலத்த காற்றால் விழுந்தன. 12 மின்கம்பங்கள் மோசமாக சேதமடைந்தன. இதனால் பல இடங்களில் மின்வெட்டு உண்டானது. பெங்களூரு மின் விநியோக நிர்வாகத்தால் சேதமடைந்த மின்கம்பங்கள் மறு சீரமைப்பு செய்யப்படுகிறது.
இந்திய வானிலை ஆய்வு மையம் கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ்நாட்டில் கனத்த மழை வாய்ப்பு உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இடியுடன் கூடிய கனத்த மழை பெய்ததால் நகரின் பல பகுதி மழைநீரில் மூழ்கியது. இதனால் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். மேலும் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் அடுத்த 5 நாட்கள் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெயிலின் தாக்கத்தை தணிக்க கனத்த மழை: கடந்த சில நாட்களாக வெப்ப அலை வீசிய நிலையில் வெப்ப மண்டல அழுத்தம் காரணமாக தற்போது மழை பெய்தது மக்களுக்கு மகிழ்ச்ச்சியை கொடுத்தாலும் அதிக கனமழையால் நீர் தேக்கம் மற்றும் மின் கம்பங்கள் பாதிப்பு என பல பிரச்சனையால் அவதியுற்று உள்ளனர்.
இதையும் படிங்க:இயல்பைவிட அதிகரிக்கும் வெப்பம்... முன்னெச்சரிக்கை தேவை...